ஜப்பான், சிங்கப்பூர் பயணம் முடிந்து வெறுங்கையோடு தமிழ்நாடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின், எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
கடந்த அதிமுக ஆட்சியில், முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் எதிரொலியாகவே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பராமரிப்பு பூங்காவை 1000 ஏக்கர் பரப்பளவில் தொடங்க அடிக்கல் நாட்டி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
அதே போன்று அதிமுக ஆட்சியில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில்உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் இருந்து பெட்டி கட்டிய பல்வேறு நிறுவனங்கள் உள்பட புதிய தொழில் நிறுவனங்களும், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தங்களின் தொழிற்சாலைகளைத் தொடங்கி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தின.
இவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்த தமிழக மக்கள் தான், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் சுற்றுப்பயணத்தை பார்த்து அதிருப்தி அடைந்தனர்.
துபாய் பயணத்தினால் தமிழகத்துக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்பதே இன்னும் கண்ணுக்குத் தெரியாத நிலையில்தான், தொழில் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று கூறிவிட்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு மீண்டும் ஒரு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் ஸ்டாலின்.
அவரைப் பார்த்தேன், இவரைப் பார்த்தேன் என்று புகைப்பட விளம்பரங்களை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் ஸ்டாலின், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுகளை ஈர்த்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் ஸ்டாலின் சந்தித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர்களை, சென்னை கோட்டைக்கு வாருங்கள் என்று கூறினாலே, வந்துவிடுவார்கள். அப்படியிருக்க அங்கு சென்று சந்தித்ததன் பின்னணியில் தமிழக மக்களின் நலன் இல்லை… குடும்பத்தின் நலனும், பிடிஆர் கூறிய முப்பதாயிரம் கோடியுமே பிரதானம் என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
இதோ 9 நாள் இன்பச் சுற்றுப்பயணம் முடிந்து தமிழகம் திரும்புகிறார் ஸ்டாலின்… ஆனால் அவர் தமிழகத்துக்காக என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வியே மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது. அவர் என்னென்ன ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்பது குறித்தும் கூட தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இப்படி அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்காமல், வெறுங்கையுடன் திரும்புகிறார் ஸ்டாலின்.
ஐ.டி ரெய்டால் திமுக அமைச்சரவையே கதிகலங்கி உள்ள நிலையில் நாடு திரும்பும் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியையே அமைச்சர்களே கொடுக்கப் போகிறார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.