இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தொடரும் திமுக அமைச்சர்களின் அட்ராசிட்டி!

தமிழக மக்களுக்கு விடியலை தருவதாக சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், தற்போது தனக்கு எப்போதுதான் விடியல் கிடைக்குமோ என்று ஏங்கித்தவித்து வருகிறார்… தன் தூக்கத்தை தொலைத்து நிற்கிறார்…. பொழுதுபோய் பொழுதுவந்தால், எந்த அமைச்சர் என்ன பஞ்சாயத்தைக் கூட்டுவாரோ என்று நினைத்து நினைத்தே கவலை ரேகைகள் எல்லாம் எட்டிப்பார்க்கத் தொடங்கி விட்டது இந்த ஆட்சிக்கு…

திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றெண்ணிக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு கண்ணுக்கெட்டியவரை கானல் நீர்தான்…
ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, செய்ததெல்லாம் பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம், பஸ் டிக்கெட் கட்டணம் என எல்லா கட்டணங்களையும் உயர்த்தி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து கொண்டிருக்கும் மக்களை சுரண்டி சுரண்டி ஓட்டாண்டி ஆக்காத குறையாக வைத்திருக்கிறது இந்த அரசு என்று பொதுமக்களின் புலம்பல்கள் கேட்காத நாளில்லை…

இதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், ஜிம், சைக்கிள், சுற்றுப்பயணம் என்று ஜாலியாக ஃபன் பண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் ஒருபுறம் என்றால், கரூர் கம்பெனி, ஈரோட்டு கம்பெனி, அண்ணா நகர் வசூல் கேங் என்று திமுகவின் அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள் இன்னொரு புறம்.. இதுபோதாதென்று அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகள்வேறு என்று எல்லாத்தையும் எழுதினால், முழு நீள மெகா சீரியலே எடுக்கலாம்… அது எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கெல்லாம் பெரிய டஃப் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை..

ஓசி பஸ், நீ எஸ்.சி தானேம்மா, எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க, உன் புருஷன் இருக்கானா? இல்லை போயிட்டானா? என்று அமைச்சர் பொன்முடியும், உனக்கும் ஆயிரம் உங்க அம்மாவுக்கும் ஆயிரம், காச வாங்கி புது ஃபோன் வாங்கி யார் கிட்ட வேனா பேசு என்று மூத்த அமைச்சர் துரைமுருகனும் சர்ச்சைகளில் சிக்க,
நீதிமன்றங்களையும், நீதிபதிகளையுமே அவதூறு பேசி மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் மற்றொரு அமைச்சரான எ.வ.வேலு.. டாஸ்மாக் கில் இதுவரை கரூர் கம்பெனி செய்துவந்த வசூல் வேலை, அப்படியே இன்று ஈரோடு கம்பெனிக்கு கைமாற்றி விடப்பட்டிருக்கிறது.. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கட்சிக்காரர்களுக்கு மட்டும்தான் என்றெல்லாம் வரும் செய்திகளால், அடச்சே போயும் போயும் இவங்களுக்கா ஓட்டுப்போட்டோம் என்று ஜனங்களையே எண்ண வைத்திருக்கிறது…

இது இப்படி என்றால், ஜெயிலில் களி திங்க வேண்டிய அமைச்சர் ஒருவருக்கு, பைனாப்பிள் கேசரியில் நெய்யை தூக்கலாக விட்டு தினசரி கொடுத்திருக்கிறது அரசு என்று கேள்விப்பட்டு கொதித்துப்போய் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்..

கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, கஞ்சா கடத்தல் என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்த்து ஊரே சிரிக்கிறது.. இதுபோன்ற பிரச்சனைகளாலேயேயும், விடியா அரசின் அமைச்சர்கள் தினந்தோறும் செய்யும் அட்ராசிட்டிகளாலுமே திமுக ஆட்சி கலைக்கப்படப்போகிறதா ? இதை ஸ்டாலின் கண்டுகொள்ளாமலே இருப்பது ஏன்? இதனால் தான் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினாரா? அமைச்சர்களின் அட்ராசிட்டிகளால் தனது ஆட்சியையே இழக்கப்போகும் ஸ்டாலின் இனி தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு, தேசிய அரசியலுக்குத்தான் போவார்போல என்று பேசிக்கொள்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

Exit mobile version