சாமானியர்களுக்கான அரசு இது….திராவிட மாடல் அரசு இது….ஓட்டு போட்டவங்களுக்கும், ஓட்டு போடாதவங்களுக்கும் சேர்த்து தான் நாங்க நல்ல ஆட்சியை தருகிறோம்….தமிழகத்தை அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்றெல்லாம் ஏக வசனம் பேசிவிட்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் இரண்டரை ஆண்டுகால அவல ஆட்சியின் சாட்சியாக அமைந்திருக்கிறது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில்.
தேசிய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிலளித்து இருக்கிறார். தமிழகம் இதுவரை மொத்தமாக பெற்ற கடன் தொகை 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடி ரூபாய் என்றும், அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மக்கள் நலத்திட்டங்கள் என்கிற பெயரில் கடன்களை பெற்றிருக்கும் திமுக அரசு, உண்மையில் மக்கள் நலத்திட்டங்களுக்காகத் தான் அவற்றை பயன்படுத்தியிருக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அப்படி என்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது இந்த விடியா அரசு?….. அதுவும் மக்கள் நலத்திட்டங்கள்?
பால் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, என தொட்டதையெல்லாம் உயர்த்தி சாமானிய மக்களை வஞ்சித்த ஆளும் விடியா திமுக அரசு இதுவரை வாங்கிய கடனில் என்ன உபயோகமாக செய்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல், முதல்வர் மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக மாஜி நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறையின் கவனம் திமுக தலைவர் குடும்பத்தின் மீதும், அமைச்சர்கள் மீதும் திரும்பிய பின், முதலாவதாக செந்தில் பாலாஜியும், இரண்டாவதாக அமைச்சர் பொன்முடியும் அவரது மகனும் சிக்க இந்த 3 லட்சம் கோடி எல்லாம் எங்கே போயிருக்கும் என்கிற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கிறது….
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் காட்டுவோம், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம், தமிழகத்தை சொர்க்க பூமி போல மாற்றுவோம் என்று ரியல்எஸ்டேட் விளம்பரங்கள் போல வாக்குறுதிகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிட்ட திமுகவின் வாக்குறுதிகள் தற்போது காற்றில் பறந்து கொண்டிருக்கிறது…..
கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஸ்டாலின் மாற்றி இருப்பதன் பின்னணி என்ன? தமிழ்நாட்டு மக்களை கடன்காரர்களாக்குவது தான் ஸ்டாலின் ஆட்சியின் சாதனையா? இன்னும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடிகளை அரசு கடனாக வாங்கப்போகிறது என்பதே மக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.