இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத் தொகை.. திமுகவை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுப்போம், அதுவும் தந்தைவீட்டு சீதனம்போல மாதாமாதம் வாங்கி தமிழகத்து பெண்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டலாம் , எல்லா பெண்களின் அக்கௌண்டிற்கும் நேரடியாக ஆயிரம் ரூபாய் வந்துவிடும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, 2 ஆண்டுகள் கழித்து, தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என்று சொல்லி இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கி ட்விஸ்ட் வைத்தது விடியா அரசு…

அது என்னப்பா இல்லதத்தரசிக்கு தகுதி என்று மனதிற்குள்ளேயே கேள்வி கேட்டு புழுங்கத் தொடங்கினர் தமிழ்நாட்டுப் பெண்கள்… அதாவது ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் மொத்தமாகவே 2.5 லட்சத்திற்கும் குறைவாக தான் இருக்க வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கான அந்த குடும்பத்தின் வருமானம் ரூ.694-ஐ தாண்டிவிடக்கூடாதாம்.

அதேபோல ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தை விட குறைவாக தான் ஒரு குடும்பம் பயன்படுத்த வேண்டுமாம். அதாவது ஒரு மாதத்திற்கு 300 யூனிட்டிற்கும் குறைவாக தான் பயன்படுத்த வேண்டுமாம். இதையெல்லாம் தாண்டி, அவர்கள் அரசிடம் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் போன்றவைகளை பெற்றிருக்கவே கூடாதாம். இப்படி இஷ்டத்திற்கு நிபந்தனைகளை விதித்துவிட்டு, கடைசியில் திமுக அட்டை இருந்தால் தான் உதவித்தொகை என்று அறிவிக்காமல் விட்டுள்ளார்களே என்று மக்களே எண்ணும் அளவுக்கு தான், விடியா திமுக அரசின் இந்த நிபந்தனைகள் எல்லாம் இருந்தன.

இந்த திட்டத்திற்கான பயணாளிகள் தொடர்பான கணக்கெடுப்புகளே இன்னும் நிறைவடையாத நிலையில், விண்ணப்ப விநியோக முகாமை இன்று திறந்து வைத்திருக்கிறார் எதற்கும் உதவாத இந்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்.

இதற்கெல்லாம் நடுவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்கள் தங்கள் வீட்டின் மின் அட்டையை கொண்டுவர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அணையர் ஒரு அறிவிப்பு வெளியிட, அது எல்லாம் தேவையே இல்லை என்று அமைச்சர் தரப்பில் மற்றொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு திட்டத்தை செயல்படுத்தவே இத்தனை குழப்பங்கள் இருப்பதை இந்த விடியா திமுக ஆட்சியில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஏற்கனவே, உங்க வீட்டு நகையயெல்லாம் கொண்டுபோய் கூட்டுறவு வங்கியில அடகுவைங்க நாங்க தள்ளுபடி பண்ணிடுவோம் என்று நாடகம் போட்டு ஏமாற்றிய அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் எறிகிற தீயில் எண்ணை ஊற்றியதுபோல் தான்..

அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்வித குழப்பமும் இன்றி எல்லா திட்டங்களையும் மக்கள் உடனுக்குடன் பெற்று வந்த நிலையில், தற்போது மட்டும் எல்லாவிதத்திலும் மக்களை விடியா அரசு குழப்புவது ஏன்?

அறிவிப்புக்கு ஒரு விழா, அப்ளிகேஷனுக்கு ஒரு விழா, அதுக்கொரு விழா, இதுக்கொரு விழா என்று விடியா அரசு, விழா அரசாக மாறியிருப்பது ஏன்?

நகைக்கடன் விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட மக்களே இன்னும் தங்கள் மனக்காயம் ஆறாமல் தவிக்கும் நிலையில் உரிமைத்தொகையிலும் பெண்கள் ஏமாற்றப்பட்டதால், கடுங்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது ஸ்டாலின் தலையிலான அரசு என்பதுதான் நிதர்சனம்.

Exit mobile version