செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களை குறிவைத்து நடந்த ஐ.டி.ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கும் நிலையில், ஊழல் செய்யும் அமைச்சர்களால் ஸ்டாலின் ஆட்சிக்கு கட்டம் கட்டப்படுவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
ஐ.டி.ரெய்டு என்றாலே செந்தில் பாலாஜி தான் எல்லோருக்கும் நினைவில் வரும். காரணம் அவரை ஐ.டி.யும், ஈ.டி.யும் ரெய்டு விட்டபோது திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு நடந்தேறிய காட்சிகள் தான்….அப்படிப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக கரூரில், செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மீண்டும் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
சோதனையில் டாஸ்மாக் வசூல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் யாரிடம் இருந்து எவ்வளவு தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்னும் விவரங்களை கணினியில் உள்ளீடு செய்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கும் ஆவணங்களைக் கொண்டு நடத்தும் விசாரணையில் செந்தில்பாலாஜி வாயைத் திறந்தாலே மாட்டிக் கொள்வோம் என்னும் அச்சத்தில் திக்குமுக்காடி கிடக்கிறார் ஸ்டாலின்.
ஒருபுறம் உண்மைகள் வெளிவந்து சந்தி சிரித்துவிடுமோ என்கிற பதற்றம்…. இன்னொரு புறம் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சம் என்று, இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஊழல் வழக்கை சந்திக்கும் ஒரு அமைச்சரிடமே ஊழல் தடுப்புப் பிரிவை வழங்கி, அதன் மூலம் தங்கள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
அதே நேரம், திமுக அரசின் தில்லுமுல்லுகளை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் கிழித்து தொங்கவிடுவதால் பதறும் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்…
அப்படியானால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தடுக்க ஸ்டாலின் பகீரதப் பிரயத்தனம் செய்வது ஏன்?
ஸ்டாலின் எத்தனை பிரயத்தனப் பட்டாலும் ஐ.டி. ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கும் நிலையில், ஊழல் செய்யும் அமைச்சர்களால் ஸ்டாலின் ஆட்சிக்கு கட்டம் கட்டப்படுவது உறுதி என்கிறார்கள் அரசியல் உள் விவகாரம் அறிந்தவர்கள்.