டெட்ரா பாக்கெட்களில் மதுவை அறிமுகப்படுத்தி, ஏழை மக்களை
திமுக அரசு குடிக்க ஊக்குவிப்பது குறித்தும், டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமி, செந்தில்பாலாஜி டூ பாயிண்ட் ஓ ஆக மாறிவிட்டாரா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
மதுக்கடைகளால் தமிழகம் நாசமாகி வருகிறது… மதுப்பழக்கத்தினால் மாணவர்கள், பெண்களின் வாழ்க்கை கெட்டுச் சீரழிகிறது…. இளம் விதவைகளும் தமிழகத்தில் அதிகமாகி விட்டனர்…. குடி கெடுக்கும் குடியை அழிக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலினின் ஆட்சியில், மதுபோதையால் வாழ்வாதாரம் இழந்து, விஷச்சாராயத்தால் உயிர்களை இழந்து கண்ணீர் கடலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.
தானியங்கி மதுவிற்பனை கருவியை அறிமுகப்படுத்திய விடியா அரசின் ஆட்சியில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க இப்போதைய புதிய அறிமுகம் டெட்ரா பேக். குவார்ட்டர் பாட்டில்களை வாங்க வருமானம் இல்லாத ஏழைகளையும் குடிநோயாளியாக்கும் வகையில் 90மில்லி அளவு கொண்ட டெட்ரா பேக்குகளை அறிமுகப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துச்சாமி.
கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று டாஸ்மாக் துறை கையில் கிடைத்ததும் செந்தில்பாலாஜி டூ பாயிண்ட் ஓவாகவே மாறியிருக்கிறார் முத்துசாமி. மதுவிற்பனை சரியில்லாத 500 கடைகளை மூடியதாக பெயரளவுக்கு அறிவித்து விட்டு, அதில் கிடைத்த சொற்ப வருமானங்களையும் விட்டு விடாமல் வசூலிக்க அறிமுகப்படுத்தப்படுகிறது டெட்ரா பேக்.
இதற்கு காரணம், மக்கள் மதுவை விட்டுவிட்டால் திமுகவுக்கு தான் பாதிப்பு என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்… ஏனெனில் சாராய ஆலைகளை வைத்து நடத்துவதே திமுகவினர்தானே. தன்விரலை வைத்தே தன் கண்ணைக் குத்திக்கொள்ள விரும்புமா என்ன? இனி அவர்கள் டெட்ரோ பேக்குகளையும் சப்ளை செய்வார்கள்…
அதுசரி, இப்படி திடீரென்று மதுவினை டெட்ரா பேக்குகளில் வைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது ஏன் என்று கேட்டால், அமைச்சர் அதற்கும் விஞ்ஞான ரீதியில் ஒரு பதில் வைத்துள்ளார். மது பாட்டிலை சாலையிலும், நீர்வழித்தடத்திலும் போடுவதால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். நீர்வழித்தடங்களில் குடிமராமத்து பணி செய்தாலே இதற்கு தீர்வு காணலாம்… ஆனால், டெட்ரா பேக்கினை அறிமுகம் செய்வதற்காக ஒரு சப்பைக்கட்டு காரணத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்கும் மேலே ஒருபடி போய், 180 மில்லி கொண்ட குவார்ட்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்வதற்காக, மற்றொருவரின் வருகைக்காக மதுப்பிரியர்கள் காத்திருப்பதாகவும், 90 மில்லி கொண்ட டெட்ரா பேக் கொண்டு வந்தால் அந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.
இப்படி மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டி, தன் சொந்த கட்சியின் மது ஆலை அதிபர்கள் கல்லா கட்டவும், அதன் மூலம் தனது சொந்த கஜானாவை நிரப்பிக் கொள்ளவும்தான், மதுவை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய இருக்கிறது திமுக என்கிறார்கள் உள் விவகாரம் அறிந்தவர்கள்.