இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மக்களைக் காக்கும் காவல்துறையை கண்டுகொள்வாரா ஸ்டாலின்?

கோவையில் காவல்துறை டிஐஜி தற்கொலை செய்துகொண்ட நிலையில், விடியா ஆட்சியில் அதிகரிக்கும் காவல்துறையினர் தற்கொலைகள் குறித்தும், மக்களைக் காக்கும் காவல்துறையை கண்டுகொள்வாரா ஸ்டாலின்? என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்..

மக்களை காக்கும் காவலர்களை இனி யார் தான் பாதுகாப்பது என்ற கேள்விதான் இன்று தமிழகம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது. காரணம், வெள்ளிக்கிழமை காலை தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் கோவை சரக டிஜஜி சி.விஜயகுமார் என்ற செய்திதான்..

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த காவல்துறை உயர் அதிகாரியின் தற்கொலை சம்பவம் விடியா திமுக ஆட்சியில் காவலர்கள் படும் அல்லல்களுக்கு பெரும் சான்று…இதுபோன்று பணிச்சுமை காரணமாக காவலர்கள் பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. உயர் அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொள்ள விவகாரம் பூதாகரமாகி வருகிறது.

அதேநேரம் டிஐஜி விஜயகுமார் சில வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சைகள் எடுத்துவந்ததாகவும் தெரிவித்துள்ள தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண், விஜயகுமாரின் மரணத்திற்கு பணிச்சுமை காரணமே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

பணிச்சுமையும் இல்லை…குடும்ப பிரச்சனையும் இல்லை என்றால் அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன?… அவருக்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம்? இப்படியான காரணங்களுக்கு காவல்துறை வைத்திருக்கும் தீர்வுதான் என்ன?…. எப்போதும் உடல் நலனை காக்க வொர்க் அவுட் செய்த முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவும், முதல்வர் ஸ்டாலினும் காவல்துறையினர் நலன் காக்க என்ன செய்தார்கள் இதுவரை? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது….

இதனால் தான் விஜயகுமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி செல்வம் தலைமையில் ஆணையம் ஒன்றை இந்த விடியா திமுக அரசு கடந்த ஜனவரி 19, 2022ல் அமைத்தது. ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை அந்த ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூட வெளியாகவில்லை என்பது தான் இங்கு முக்கியமாக உற்றுநோக்க வேண்டியது.

காவல்துறையில் காலிப்பணியிடங்களும் அதிகமாக இருக்கும் சூழலில், ஒரே காவலர் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் சூழலும் தொடர்கதையாகி வருகிறது. மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் காவலர்களுக்கு, அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களின் பணிச் சுமையை குறைக்கவும், என்ன செய்யப்போகிறது இந்த விடியா திமுக அரசு?

விடியா திமுக ஆட்சியில் இனி காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?….தன் குடும்ப மக்களை மட்டுமே கண்டு கொள்ளும் ஸ்டாலின், தமிழக மக்களைக் காக்கும் காவல்துறையை கண்டுகொள்வாரா? என்ற கேள்வியே இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

Exit mobile version