இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தக்காளி விலை உயர்வு! கொந்தளிப்பில் இல்லத்தரசிகள்!

தக்காளி விலையைத் தொடர்ந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், கொந்தளிப்பில் உள்ள இல்லத்தரசிகளின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொள்கிறதா விடியா அரசு என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

விண்ணை முட்டும் விலைவாசி என்பதை இன்று தமிழகத்தில் ஒவ்வொரு இல்லத்தரசிகளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக் கொண்டிருக்கும் தக்காளியை, இரும்பு பெட்டிக்குள் பூட்டி வைத்து பத்திரப்படுத்துவதாக வெளியாகும் நகைப்பு வீடியோ காட்சிகள் எல்லாம் இந்த விடியா அரசில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது.

கடந்த மே மாதம் கூட 6கிலோ 100 ரூபாய் என்று கூவி கூவி விற்கப்பட்ட தக்காளியின் விலை இன்று சதத்தை தாண்டி ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடத்தையும் திண்டாட வைத்திருக்கிறது.

நாங்கள் 60 ரூபாய்க்கு ஒருகிலோ தக்காளி தருகிறோம்… ரேசன்கடையில் தக்காளி விற்கிறோம் என்றெல்லாம் அரசு பம்மாத்து வேலையைக் காட்டினாலும், இல்லத்தரசிகளுக்கு சமையலுக்கான தக்காளி கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி உள்ளது.

இப்படி தக்காளியின் விலை உயர்வால் கவலையில் தவிக்கும் தமிழக தாய்மார்களுக்கு மேலும் பேரிடியாக அடுத்தடுத்து காய்கறிகள், மளிகைப் பொருட்கள், எண்ணெய் வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த 2021 மார்ச்சில் கிலோ 20ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய், இன்றைக்கு 60க்கு விற்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கிலோ ரூ.30க்கு கிடைத்த பீன்ஸின் இன்றைய விலை 110. 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் இன்றைக்கு 50 ரூபாய்.

இதுபோதாதென்று, பருப்பு, பட்டாணி மற்றும் பயறு வகைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் எண்ணெய் விலையும் உயர்வை சந்தித்திருக்கிறது. இப்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்திருக்கும் நிலையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு மௌனித்து நிற்கிறது….

ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கட்டுக்குள் வைத்திருப்போம் என்றெல்லாம் கம்பி கட்டும் கதை கட்டியவர்களின் ஆட்சியில் விலைவாசி உயர்வு பூதாகாரமாகி உள்ளது.

இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையை அல்லாட வைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் ஆட்சியைக் காப்பாற்ற செந்தில்பாலாஜியை பாதுகாப்பதிலும், வாரிசு நடித்த மாமன்னனைப் பார்ப்பதிலும், அக்கறை காட்டி வருகிறார் ஸ்டாலின்.

அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விலைவாசி உயர்வால் கொந்தளிப்பில் உள்ள இல்லத்தரசிகளின் வயிற்றெரிச்சலை விடியா அரசு வாங்கிக் கட்டிகொண்டுள்ளது. அது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

Exit mobile version