செந்தில் பாலாஜி வழக்கில் இருவேறு தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ள நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவர் மீது பணமோசடிவழக்கு பதிந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை காப்பாற்ற அடுத்து என்ன நாடகம் ஆடப்போகிறார் ஸ்டாலின் என்பது குறித்தும் அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். செந்தில்பாலாஜி சட்ட விரோதமாகக் காவலில் உள்ளதாக கருதி அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்துள்ளார்.
அதே நேரம் வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி பரத சக்கரவர்த்தியோ, சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூற முடியாது என்று தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பின் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்படி இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்புகளை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, மூன்றாவது நீதிபதியை விசாரணைக்காக நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தீர்ப்புகள் வெளியான நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .காரணம், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் கீழ் இயங்கும் காவல்துறையின் மற்றொரு அங்கமாக செயல்படுவதுதான்.
செந்தில் பாலாஜி உத்தமர், அவர் ஒரு அமைச்சர், அவரை எப்படி கைது செய்யலாம்? அவர் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர் அமைச்சரவையில் தொடர்வதில் தவறு இல்லை என்றெல்லாம் வாய்கிழிய பேசிய முதலமைச்சர் ஸ்டாலினின் கீழ் உள்ள மத்திய குற்றப்பிரிவு இன்று செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், தொடர்ந்து அவரை தனது அமைச்சரவையில் வைத்திருக்க அடுத்த கட்டமாக ஸ்டாலின் இன்னொரு நாடகத்தை அரங்கேற்றுவார் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.