மேகதாதுவில் அணை கட்டி டெல்டாவை பாலைவனமாக்க கர்நாடக காங்கிரஸ் அரசு துடிக்கும் நிலையில், ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எந்த அளவு மகிழ்ச்சியாக இருந்ததோ, அதைவிட பேரிடியை காங்கிரஸ் இறக்கியுள்ளது மேக தாது அணை விவகாரத்தில்.
தேர்தல் வாக்குறுதியின்போதே மேகதாது அணை கட்ட 9ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்த காங்கிரஸ், தற்போது வெற்றி பெற்ற நிலையில், துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனை தடுத்து நிறுத்த திமுக என்ன செய்யப் போகிறது என்னும் கேள்வி எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்துவிட்டு, தானே நேரடியாக டெல்லி சென்று காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்கொள்ள இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
பதவி ஏற்பு விழாவுக்காக பெங்களூருவுக்கு சென்றவர்கள், மேகதாது அணை விவகாரத்துக்காக அங்கே நேரடியாகச் சென்று பேசமுடியாதா? உங்களின் கூட்டணிக் கட்சிதானே காங்கிரஸ்? நீங்கள் சொன்னால் கேட்காதா என்றெல்லாம் கேள்விக்கணைகள் சுழன்றடிக்கின்றன அரசியல் அரங்கில்.
தமிழகத்திலும் கர்நாடகாவில் கடந்த ஆட்சிக் காலங்களில் மேகதாது அணை விவகாரம் அமைதியாக கிடந்தது. தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்த மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பை அரசிதழில் வெளியிடச் செய்து சாதித்தும் காட்டினார்.
அவருக்கு பிறகு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியிலும் மேகதாதுவுக்கு எதிராக விவசாயிகளின் குரலுக்கு முன்னுரிமை அளித்து வந்தனர். மேகதாது அணை விவகாரத்தில் அதிமுக அரசு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்த காரணத்தால், அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு எடுக்காமலேயே இருந்தது.
ஆனால், தற்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் அரசின் முடிவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடுகிறது திமுக.
தங்கள் குரலுக்கு செவி மடுக்காமல், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்ய துணிந்துவிட்ட திமுக அரசால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.