இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நீதிமன்றத்தையே ஏமாற்றினாரா அமைச்சர் பொன்முடி!

ஏதேனும் சில சமூகப் பிரச்சனைகளைப் பார்த்து ஆதங்கப்பட்டு தாங்களாகவே அந்த பிரச்சனையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள் சில நீதிபதிகள்… ஆனால், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு அமைச்சரின் மீதான வழக்கை தூசிதட்டி எடுத்திருக்கிறார் நீதிபதி என்றால், அந்த வழக்கின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்… அப்படி யார் சிக்கியிருப்பது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஆம், ஓசிபஸ் புகழ் பொன்முடிதான் அந்த வில்லங்க வித்வான்.. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்திற்கே விபூதி அடிக்கப் பார்த்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி … அதைக் கண்டுபிடித்து அதில் உள்ள பல வீரியமான விஷயங்களை உலகத்திற்கே அம்பலப்படுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

1996-2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் நடந்துவந்த வழக்கில் , போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி… தீர்ப்பு வழங்கிய 2 நாட்களில் நீதிபதி ஓய்வு பெற்றதன் பின்னணியில் ஏதேனும் சதிவலைப்பின்னல்கள் இருக்கின்றனவா? பொன்முடிக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து மேல் முறையீடு செய்யப்படாதது ஏன் ?
இத்தனை ஆண்டுகளாக பொன்முடி வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிபதியிடம் இருந்து இந்த வழக்கை அவசர அவசரமாக ஏன் வேலூருக்கு மாற்ற வேண்டும்? இரு நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றுவதற்கும், அதுவும் குறிப்பு மூலமாக மாற்றம் தொடர்பாக அறிவிப்பதற்குமான அதிகாரம் எங்கிருந்து வந்தது? என்ற விஷயங்களை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததோடு, பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் வரும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் நீதிபதி…

ஆக, திட்டமிட்டு, சட்டத்தை வளைக்க முயற்சித்தாரா பொன்முடி? அமலாக்கத்துறை ரெய்டால் கதிகலங்கி இருக்கும் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கிலும் வசமாய் சிக்கிவிட்டாரா? சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி அமைச்சர் பொன்முடி சிறைக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா? தனக்கிருக்கும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நீதிமன்றத்தையே வளைக்கப்பார்த்தாரா பொன்முடி? அப்படி அவர் செய்திருந்தால் அது எவ்வளவு பெரிய குற்றம்? அமைச்சரவையையே ஆட்டிப்பார்க்கப்போகும் பொன்முடியின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை இப்போதும் கூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றால் ஆபத்து, பொன்முடிக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கும்தான் என்பதில் சந்தேகமில்லை..

 

 

Exit mobile version