இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செய்த தவறுகளை நாடாளுமன்றத்தில் மாற்றிப் பேசும் திமுக எம்பிக்கள்!

கட்சத்தீவு விவகாரத்தை எடுத்தாலே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடிக்கும் திமுகவை தமிழக சட்டமன்றத்தில் பங்கமாய் கலாய்த்திருப்பார் புரட்சித்தலைவி ஜெயலலிதா.

தமிழக மக்கள் அறிந்த பழைய கதைஆச்சே இது, இப்போது எதற்கு அது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. காரணம் இருக்கிறது. இந்த கட்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் நாடகம் ஆடியிருக்கிறது திமுக…

இலங்கையிடம் இருந்து கட்சத்தீவை மீட்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, எண்ணற்ற குற்றச்சாட்டுகளை திமுக எம்.பி டி.ஆர் பாலு அடுக்கினார்.. தற்போதைய மத்திய அரசு என்னசெய்தது என்பதெல்லாம் இருக்கட்டும்.. கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் கைகோர்த்துகொண்டு வாய்மூடி மௌனித்து இருந்துவிட்டு, இன்று வந்து இப்படி நாடகம் போடுவது நியாயமா?

ஆட்சிக்குவந்ததில் இருந்து, மத்திய அரசு அதைச் செய்யவில்லை, இதைச்செய்யவில்லை என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு குமுறுகிறார்… நியாயமம் தான். கேள்வி கேட்கத்தான் எம்பியாக மக்கள் அவர்களை டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது திமுக? அதில் எதை நிறைவேற்றியிருக்கிறது இந்த விடியா அரசு? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கே விடியல் தருவோம்!…. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் ரத்து தான்!….தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்! என்று கதை அளந்து விட்டு ஆட்சிக்கு வந்தவுடன், தங்கள் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும், கர்நாடகத்திற்கு சென்று காவிரி நீரை பேசி வாங்கித்தருவதற்கு கூட வக்கில்லாமல், இருக்கிறது இந்த திராணியற்ற அரசு..

இப்படி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திராணியில்லாத திமுக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசை கவிழ்க்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருக்கிறது.. அடடே, உங்க நாடகத்தை கண்டு ஊரே வியக்குதுங்க… ஆளுங்கட்சியாக மாநிலத்தில் ஒன்றும் நாங்கள் கிழிக்க மாட்டோம், ஆனால் மத்திய அரசைக்கண்டு நீங்க ஏன் அதைச்செய்யல, நீங்க ஏன் இதைச்செய்யல என்று கேள்வி மட்டும் கேட்டு, வரலாற்றையே திரிப்போம்…. இதுதானா உங்க திராவிட மாடல் ஆட்சி?

இப்படி, திமுக, அடுத்தவர்களை கைகாட்டியே, தான் தப்பிக்கப்பார்ப்பது ஏன்? தங்கள் ஆட்சியின் அவலத்தை தீர்க்கத்தெரியாத முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சி எம்பிக்களை வைத்து மத்திய அரசை சாடுவது ஏன்? கச்சத்தீவு முதல் நீட் தேர்வு வரை தமிழக மக்களை ஏமாற்றி, துரோகம் செய்து, இப்போது நாடாளுமன்றத்தில் தனது வரலாற்றுப் பிழைகளை திமுக மாற்றத் துடிக்கும் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

Exit mobile version