இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. வாரிசு மற்றும் மருமகனாலேயே தனது ஆட்சிக்கு முடிவுரையை தேடிக்கொண்டுள்ளாரா ஸ்டாலின்?

திமுக ஆட்சியில் உதயநிதியும், சபரீசனும் கோடிக்கணக்கில் பணம் சேர்த்ததாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானது குறித்தும், முப்பது ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை எப்படி உதயநிதியும், சபரீசனும் சேர்த்தனர் என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

விஞ்ஞான ஊழலுக்கு பெயர்போனவர்கள் திமுகவினர் என்பது, நாடே அறிந்ததுதான். அப்படிப்பட்ட ஊழல் செய்யும் திறமைமிக்கவர்களை கொண்ட கட்சியை தற்போது இயக்குவதாக அறியப்படும் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ டேப் வெளியாகி அரசியல் களத்தை பற்றி எறிய வைத்துள்ளது.

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் – ஸ்டாலின் இடையே உரசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பிடிஆர் தியாகராஜன் பேசிய ஆடியோவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி காணொளியும் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வரின் மகனும், மருமகனும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பது குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துவிட்டதாக ஆடியோவில் பதிவாகியுள்ள நிலையில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால், திமுக அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை ஆளும் விடியா அரசு மீது நாள்தோறும் பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்து வரும் நிலையில், இது குறித்து காவல்துறை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய டிஜிபி சைலேந்திர பாபு, இதுபோன்ற புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் செவி சாய்க்காமல் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக ஆட்சியமைத்தது முதல் இவர்கள் சேர்த்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து விவரங்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என கூர்ந்து நோக்கி வருகின்றனர் அரசியல் நோக்கர்கள்….

பிடிஆர் தியாகராஜனின் ஆடியோ டேப் வெளியான நிலையில் ஊழல் குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

இல்லை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துவிட்டாரா ஸ்டாலின்?

வாரிசு மற்றும் மருமகனாலேயே தனது ஆட்சிக்கு முடிவுரையை தேடிக் கொண்டுள்ளாரா ஸ்டாலின்? அல்லது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பதவியில் இருந்து நீக்கி விட்டு தனது குடும்பத்தை காத்துக்கொள்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version