ஸ்டாலினின் புகழ்பாடும் மன்றமாகவே நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் அவசர அவசரமாக நடந்து முடிந்துள்ளது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் தலையங்கம்.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை என்பது பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா என மக்களின் முதலமைச்சர்கள் அலங்கரித்த சட்டப்பேரவையை, தனது புகழையும் தனது மகனான வாரிசு அமைச்சரின் புகழையும் பாடும் மண்டபமாகவே மாற்றி சட்டசபை கூட்டத்தொடரை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
சபாநாயகருக்கும், முதலமைச்சருக்கும் எழுந்து வணங்கும் அமைச்சர்கள், முதல்முறையாக வாரிசு அமைச்சருக்கு எழுந்து நின்று வணங்கிய வினோத வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வாரிசு அமைச்சரின், வாரிசின் பிறந்தநாளுக்கு சட்டமன்றத்திலேயே வாழ்த்துக் கூறி துதிபாடிய விதிமுறை மீறல்களும் அரங்கேறியிருக்கிறது.
2ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சாதிச்சண்டை இல்லை, கலவரம் இல்லை,கஸ்டடி மரணம் இல்லை என்றுக் கூறி தனது ஆட்சிக்கு தானே புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார் இதுநாள் வரை கண்ணையும் கருத்தையும் திறக்காத ஸ்டாலின்…
ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது முதல், அண்ணாதுரையைப் போலத்தான் இந்த ஐயாதுரை என்று சர்வாதிகாரம் பேசும் அளவுக்கு சட்டசபையின் மாண்பை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்…
நடப்பு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற நிலையில் மக்களுக்கு பயனுள்ளதாக எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் அவசரகதியில் முடிந்திருக்கிறது.
முதலமைச்சரும், அமைச்சர்களும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் அவையின் கண்ணியத்தைக் காக்கவேண்டி சபாநாயகரோ, ஒருசார்பாக நடந்து கொள்வது, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்காதது, எதிர்க்கட்சி தலைவரின் பேச்சை நேரலை செய்யாமல் துண்டிப்பது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு இடமளிக்காமல் அரசியல் செய்தது, எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு தானே அமைச்சர் போல பதில் அளிப்பது, கூட்டணி கட்சியினரை கேலி கிண்டல் செய்வது என்று, சபாநாயகருக்கான தகுதிகளை எல்லாம் ஓரம் கட்டிவைத்து விட்டு திமுக நிர்வாகி போலவே செயல்பட்டிருக்கிறார் அப்பாவு.
சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் 12 மணி நேர பணி குறித்த சட்ட மசோதாவை நிறைவேற்றி தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறது ஆளும் விடியா அரசு.
ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் புகழை பாடுவதற்கு தான்
தமிழக சட்டமன்றம் கூட்டப்பட்டதாக சட்டப்பேரவை கூட்டத்தை தினமும் பார்த்துவந்த அரசியல் நோக்கர்கள் அங்கலாய்க்கிறார்கள். மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிய சட்டமன்றம் இன்று வெறும் புகழ்ச்சிக்கான மண்டபமாக மாறிப்போயிருக்கிறது என்பதும் அவர்களின் ஆதங்கம்.