இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. நியூஸ் ஜெ எதிரொலியால் பல்வீர்சிங் மீது பாய்ந்தது வழக்கு..!

அம்பாசமுத்திரம்:

விசாரணைக்கு வந்தவர்களின் பல்லைப் பிடுங்கிய விவகாரத்தில், நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக காவல்துறை வழக்கு பதிந்தது குறித்தும், பல்வீர் சிங்கை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது நம் தமிழ்நாடு காவல்துறை என்ற பெருமையெல்லாம் இருந்த காலம் மலையேறி போய்விட்டது. சமீப காலமாக நடக்கும் சம்பவங்களே அதற்கு சான்று. குற்றம் செய்தால் விசாரிப்பதை விட்டுவிட்டு, விசாரணைக்கு வந்தவர்களின் ரத்தம் சொட்ட சொட்ட பற்களை பிடுங்கி பல் டாக்டர் போல செயல்பட்டிருக்கிறார் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங்.

இந்த சம்பவம் ஏதோ ஒருவருக்கு மட்டுமே நிகழ்ந்ததல்ல. சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்க அம்பாசமுத்திரம் தொடங்கி ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்தது. பல் பிடுங்கிய விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் பேசிய பிறகுதான் விடியா திமுக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது. ஆனால், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 ஆய்வாளர்கள், ஒரு உதவி ஆய்வாளர், மற்றும் 2 காவலர்களுக்கு இடமாற்றம் என்ற பரிசை திமுக அரசு கொடுத்து இருக்கிறது.

அத்துமீறிய பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசு மீது தொடர்ந்து நியூஸ் ஜெ தொலைக்காட்சி கேள்வி எழுப்பியதையடுத்து, 20 நாட்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்துள்ளது ஆளும் விடியா திமுக அரசு. ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இதன்பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியிருக்கிறது.

பணி நீக்கம் செய்து தண்டிக்கப்பட வேண்டிய பல்வீர்சிங் மற்றும் அவருக்கு உறுதுணையாக நின்ற அதிகாரிகள் மீது கண் துடைப்புக்கு தான் நடவடிக்கை எடுப்பது போல பாவிக்கிறதா திமுக அரசு? இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், பணி இடமாற்றம் மட்டுமே அளித்திருப்பதன் மூலம் அவர்களை பாதுகாக்க நினைக்கிறதா ஸ்டாலின் அரசு? பல்வீர்சிங் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை வாங்கித்தருமா இந்த விடியா அரசு? அல்லது அவரைக் காப்பாற்ற என்னென்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்து குற்றமிழைத்த பல்வீர் சிங்கை காப்பாற்றப்போகிறாரா ஸ்டாலின்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version