இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. மக்கள் விரோத சட்டத்திற்கு அனுமதிக்கும் திமுக.. கடந்த ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், தற்போது நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் விடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனை தங்களது வெற்றியாக திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவற்றை ஒருங்கினைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில், மீத்தேன் எரிவாயு எடுத்தல், கெமிக்கல் பணிகள், விலங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டங்களும் அமைக்கப்படக்கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

75 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோல உணவு தட்டுப்பாடு வராமல் இருக்கவும், விவசாயம் பாதுகாக்கப்படவும் சிறப்பு பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்பட்டது பொற்கால அதிமுக ஆட்சியில் என்றே கூறலாம்.

அதிமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்தால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து இருந்த நிலையில், விவசாயிகளுக்கு மாபெரும் இடியை இறக்கியது ஆளும் விடியா அரசின் நடவடிக்கை.

தமிழக டெல்டா பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வுகளுக்கு கொள்ளைப்புறமாக அனுமதி அளித்து விட்டு மக்களின் காவலனாகவும் விவசாயிகளை காப்பவராகவும் தன்னை காட்டிக் கொண்டார் ஸ்டாலின்.

டெல்டாகாரன் என்று தன்னை சொல்லிக் கொண்ட ஸ்டாலின், கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி கொடுத்ததை போன்று, தற்போது நிலக்கரி ஆய்வுகளுக்கும் அனுமதி கொடுத்தது டெல்டாகாரன் செய்யும் வேலையா என்று விவசாயிகள் அதிருப்தி குரல் எழுப்பியிருந்தனர்.

மத்திய அரசுக்கு விசுவாசியாக இருப்பதால், அவர்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு வாய் பொத்திக்கொண்டு கையெழுத்திட்டுவிட்டு, தமிழக மக்களிடம் கபட நாடகமாடுகிறது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்த நிலையில்தான் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்த்து தெரிவித்து அதிமுக தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, நிலக்கரி ஏல அறிவிப்பில் தமிழகத்தின் டெல்டா பகுதிகள், நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிமுகவின் முயற்சியால் நிலக்கரி ஏலம் ரத்து செய்யப்பட்டதைக் கூட தனது சாதனையாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள நினைக்கிறது திமுக என்பது அவர்களின் வெற்று விளம்பரக்கூச்சலில் இருந்து அம்பலமாகி உள்ளது.

கொள்ளைப்புறமாக மக்கள் விரோத திட்டங்களுக்கு திமுக அனுமதித்து விட்டு கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றம்சொல்வதை திமுக நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்க்கள்.

Exit mobile version