இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. ஏப்ரல் 3, 2023

சட்டசபையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய நிதி அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 68 சதவீதம் நிறைவேற்றப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தகவல் அளித்துள்ள நிலையில், அதிமுக மீது திட்டமிட்டு ஸ்டாலின் அரசு அவதூறு பரப்புவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்….

பொய் புரட்டுக்கு மறுபெயர் என்றால் அது திமுகதான் என்பது மக்கள் அறிந்த செய்தி. அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது, அதிமுக செய்ததை தாங்கள் செய்ததாக பெருமை பீற்றிக்கொள்வது என்பதை வழக்கமாகக் கொண்ட திமுக அரசு இந்த முறை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் வாயிலாக சில போலிப் புரட்டுகளை கூறியுள்ளது. கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவு பெறாதது போலவும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்புதான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி இருப்பது போலவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ஆனால், கடந்த பத்தாண்டு கால பொற்கால ஆட்சியில் அதிமுக செய்த சாதனைகளும் கொண்டு வந்த திட்டங்களும் ஏராளம். மகப்பேறு மகளிருக்கான நிதித்திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புதிட்டம், தொட்டில் குழந்தை திட்டம், இலவச கல்வி உபகரணங்கள், கல்வி நிதியுதவி, திருமணம் நிதியுதவி , முதியோர் நிதியுதவி என திட்டங்கள் மட்டுமின்றி விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன், விலையில்லாஆ அரிசி, அம்மா மினி கிளினிக், உழைக்கும் மகளிருக்கு இருசக்கரவாகனம் என்று புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் அவரைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமியும், மக்களுக்காக செய்த நலத்திட்டங்கள் கணக்கில் அடங்காதவை.

இப்படி அதிமுக கொண்டுவந்த பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பெரும்பாலானவை, சட்டமன்றத்தில்110 விதியின் கீழ் நிறைவேற்றப்பட்டவைதான். காரணம், இந்த விதியின் கீழ் வரும் அறிவிப்புகளுக்கு எந்த விதமான விவாதமும் கூடாது என்று பேரவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி 110 விதிகளின் கீழ் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டு அறிவிக்கப்பட்ட 1704 திட்டங்களில் 1167 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என திமுக அரசின் நிதியமைச்சர் கொடுத்துள்ள வெள்ளை அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 68 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 491 பணிகள் நடைபெறுவதாகவும், ஆணை வெளியிட வேண்டியவை 20, கைவிடப்பட்டவை 26 என மொத்தமும் நிதியமைச்சரின் அறிக்கையிலேயே உள்ளதாகவும் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக ஆட்சியில் எதுவுமே நடைபெறவில்லை என்று பேசியுள்ள ஆளும் திமுக அரசையும் நிதியமைச்சரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

110 விதியின் கீழ் அதிமுக அரசால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். இனிமேலும் அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதிலேயே கவனம் செலுத்தினால் அதற்கு பொதுமக்களே தகுந்த பதிலினை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வழங்குவார்கள் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

 

Exit mobile version