அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால், புரட்சித்தலைவியின் ஆசியுடன் வெற்றி மேல் வெற்றிகளை பொதுச்செயலாளர் குவிக்க உள்ளது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
எனக்குப் பின்னாலும், 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக என்ற இயக்கம் நிலைத்து நிற்கும் என்று கூறிச் சென்றிருக்கிறார் புரட்சித்தலைவி. அவரது வார்த்தைகளை உண்மையாக்கும் வகையில், அதிமுக பொதுக்குழுவால் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பின்னர், தான் சந்தித்த சோதனைகள் எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் அதிமுக மக்கள் மன்றத்தில் கோலோச்சி நிற்கிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் எப்படி கழகம் புரட்சித்தலைவியால் ராணுவக் கட்டுப்பாடுடன் வழிநடத்தப்பட்டதோ அப்படித்தான் இன்று தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கழக பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் உள்ள சிலுவம்பாளையத்தில் இருந்து கிளைக்கழகச் செயலாளராக தனது பயணத்தை தொடங்கிய ஒருவருக்கு, முதலமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் வாய்ப்பை தந்து அழகு பார்த்திருக்கிறது அதிமுக என்னும் மக்கள் இயக்கம்.
அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக, ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒரே குரலாக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து செயல்படும் துரோகிகளுக்கு எல்லாம் சம்மட்டி அடி இன்று விழுந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 அன்று கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. கட்சியினரும் நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்க வலியுறுத்தி தகுந்த சான்றுகளை அளித்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை 11, 2022 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கப்பட்ட தீர்மானங்களையும், பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அங்கீகரிப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் வீறுகொண்டு களமாட அதிமுக தொண்டர்படை ஆயத்தமாக உள்ளதும், வெற்றி என்பது அதிமுகவுக்கே என்பதும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.