சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நட்சத்திர ஹோட்டல்கள், பார் வசதியுள்ள கேளிக்கை விடுதிகளை, இன்று இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அனைத்து விதமான உணவகங்களும் இரவு 10 மணிக்கே மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும் என்றும், 300 இடங்களில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.