ஸ்மார்ட்போன், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது என்றால், உரையாடல்களை விரல் நுனியில் சுருக்கிவிட்டது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களைக் குறிவைத்து அவர்களின் வாட்ஸ்அப் கணக்கை இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியதை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது.
இந்நிலையில் வாட்ஸ்அப் தரப்பிலிருந்து கடந்த வியாழக்கிழமை புதிய Update-ஐ வெளியிட்டது. ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த கைரேகைப் பாதுகாப்பை (Fingerprint lock) ஆண்ட்ராய்டு தளத்திலும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப். இதன் மூலம் மூன்றாம் தரப்பு பாதுகாப்புச் செயலிகளைப் பயன்படுத்துவதும் அதனால் தகவல் பறிபோகும் ஆபத்தும் குறையும் என்று வாட்ஸ்அப் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சேவையைப் பயன்படுத்த புதிய வாட்ஸ்அப் பதிவை அப்டேட் செய்ய வேண்டும். அதில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் மொபைலில் பதிவு செய்துள்ள கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி ஒன்றிணைந்து விடும். செயலியைவிட்டு வெளிவந்த மறுகணமே லாக் ஆகும்படியும் 1 நிமிடம், 30 நிமிடம் கழித்து லாக் ஆகும்படியும் விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எனினும் வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புகளையும் வீடியோ அழைப்புகளையும் பூட்டிய நிலையிலேயே பேசலாம். ஐபோனின் புதிய அப்டேட்களில் ஃபேஸ் ஐடி (Face ID) கொடுக்கப்பட்டதை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்தப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு டார்க் மோட் (Dark mode) சேவையும் புதிய அப்டேட்டில் கொடுத்ததோடு, கூடிய விரைவில் அனைவருக்கும் இந்தச் சேவை நீட்டிக்கப்படும் என வாட்ஸ்அப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் குறித்த சமீபகால சர்ச்சைக்கு சிறியதொரு முற்றுப்புள்ளியாக இருக்கலாம்.