கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 50 பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டவைகள் கஜா புயல் கோர தாண்டவத்தில் பாதிப்படைந்தன. தென்னை, வாழை மரங்கள் மற்றும் தோப்புகள் சேதமடைந்தன. மேலும், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பில் முற்றிலும் வீடுகளை இழந்த 50 பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கஜா புயலில் பாதிப்படைந்த ஏழு மாவட்டத்தை சேர்ந்த மக்களை பார்க்கும் பொழுது வேதனையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவோ நல்ல உள்ளம் படைத்தவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரிடையாக சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post