அய்யய்யோ எம் புள்ள என்னவிட்டுப் போயிட்டானே… நான் என்ன செய்வேன் என்று கதறிய அந்தத் தந்தையின் குரல் இனிமேல் எங்கும் ஒலிக்கப் போவதில்லை. ஆம் நீட் தேர்வை ஒழிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா அரசு மகன், தந்தை என 2 உயிர்களைக் குடித்திருக்கிறது.
அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவராக வேண்டும் என்னும் லட்சியக் கனவுடன் வலம் வந்த 19 வயது ஜெகதீஸ்வரன் இன்று உயிரோடு இல்லை… கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து மகனைத் தன்னோடு தாங்கி அவனுக்காகவே வாழ்ந்து வந்தவர்தான் தந்தை செல்வசேகர்.
சிபிஎஸ்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த தனது மகனின் மருத்துவக் கனவுக்காகவே நீட் தேர்வு பயிற்சிக்காக லட்சங்களை செலவிட்டுள்ளார். முதல்முறை நீட் தேர்வில் 227 மதிப்பெண்கள் பெற்ற ஜெகதீஸ்வரன் மீண்டும் முயற்சித்து 392 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரால் அரசு கோட்டாவில் மருத்துவக் கல்லூரியில் இணைய முடியவில்லை. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பல லட்சங்களை கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பொருளாதார சூழலும் இல்லை… அப்படி கொட்டிக் கொடுத்து படிப்பவர்களால் மருத்துவத்தை சேவையாக செய்ய முடியாது என்னும் எண்ணம் மிகுந்திருந்ததால், தனக்கு கிடைக்காத மருத்துவ சீட்டால் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ஜெகதீஸ்வரன்.
மகன் சோர்ந்திருப்பதைக் கண்டு மனதளவில் உடைந்தாலும், அதனைக் காட்டிக் கொள்ளாமல், மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு எழுத பயிற்சி எடுப்பதற்காக மகனை சேர்த்திருக்கிறார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படிக்கும் அறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தகவல் கிடைத்து வீட்டுக்கு வந்து மகனின் உடலைப் பார்த்து உடைந்து போயிருக்கிறார் தந்தை செல்வசேகர். நீட் என்னும் அரக்கனாலும் அதனை ஒழிப்பேன் என்று வெற்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் அரசாலும் தனது மகனின் உயிர்பறிபோன துயரம் அவரை ஆற்றொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது.
ஜெகதீஸ்வரனின் நண்பர்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவர் என்றால் இதற்கு முன்பாக மருத்துவர்கள் ஆனவர்கள் யாரும் உண்மையான மருத்துவர் இல்லையா? தனியார் மருத்துவமனைகளில் 25 லட்சம் ரூபாய் பணம் கட்டி மருத்துவம் படிப்பவர், தான் செலவிட்ட தொகையை எப்படி எடுப்பது என்றுதான் யோசிப்பாரே தவிர தரமான மருத்துவசேவை குறித்து எப்படி யோசிப்பார் என்று அவர்கள் எழுப்பிய கேள்விகள் ஆட்சியாளர்களுக்கானவை.
மனைவியைப் பிரிந்தது முதல், முழுக்க முழுக்க மகனின் எதிர்காலத்துக்காக வாழ்ந்து வந்த அந்த தந்தை தனது மகனின் இறந்த உடலுக்கு இறுதிச் சடங்கை செய்துவிட்டு வந்தவர், தனித்திருக்க முடியாமல் மகனின் ஜீவன் போன இடத்துக்கே தனது ஜீவனை அனுப்பியிருக்கிறார் தூக்கிட்டுக் கொண்டு…
மகனின் மரணத்தின் போது செல்வசேகருக்கு ஆறுதலாக நின்ற ஜெகதீஸ்வரனின் நண்பர்கள், தற்போது செல்வசேகரும் உயிரிழக்க அடுத்தடுத்த உயிரிழப்பின் அதிர்ச்சிகளால் உறைந்திருக்கிறார்கள். நண்பரையும் அவரது தந்தையையும் பலிகொண்ட நீட்டும், விடியா அரசின் வெற்று வாக்குறுதியும் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிரை காவு வாங்கப்போகிறதோ என்று அங்கு வந்த வாரிசு அமைச்சரிடம் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒவ்வொன்றும் விடியா அரசுக்கு சவுக்கடி.
மாணவி அனிதா மரணத்தை பூதாகரமாக்கிய விடியா ஆட்சியில், நீட் தேர்வில் நிகழ்வும் மரணங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது. தனது வாரிசை அரசியலில் கொண்டு வருவதற்காக நிகழ்ச்சிகளில் தலைகாட்ட அழைத்துச் செல்லும் தந்தை உதயநிதி, இன்று ஒரு தந்தையும் மகனும் பலியானதற்கு என்ன சொல்லப் போகிறார். நீட்டை ஒழிக்கும் ரகசியம் தங்களிடம் இருப்பதாக வெற்று அறைகூவல் விடுத்தவர்களுக்கு இன்று நிகழ்ந்துள்ள தந்தை மகன் தற்கொலை அவர்களின் மனசாட்சியை உலுக்குமா?
Discussion about this post