சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் தான் சரணடைய ஒரு மாதம் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் எதிரான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு, 31-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் சஜ்ஜன் குமார் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது மகன்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கவேண்டும் என்பதால், சரணடைய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.