சென்னை, கொளத்தூரில் பெயின்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் பாஸ்கர் வயது 45, பெயின்டராக பணிப்புரிந்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் கௌத்தூர் கங்கா தியேட்டர் அருகே உள்ள செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பாஸ்கரை ஓட ஓட விரட்டி சென்று தலையில் தாறுமாறாக வெட்டியது. இரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பாஸ்கரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரண்டு நாட்களாக கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த பாஸ்கர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் லோகேஷ் என்ற 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த வருடம் வீரமணி என்ற இளைஞருக்கும் பெயிண்டர் பாஸ்கருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் பாஸ்கர் வீரமணி தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வீரமணி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு ஜன்னியில் வலிப்பு வந்து இறந்துள்ளார். இதற்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயமே காரணம் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு பழி தீர்க்க காத்திருந்த வீரமணியின் நண்பர்களான அஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி பாஸ்கரை சராமாரியாக அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது, மேலும் இந்த வழக்கு தொடர்பாக தற்போது கொளத்தூர் பகுதியை சேர்ந்த அஜித் , மற்றும் லாசர் ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.