அமெரிக்காவில் ஆஸ்காரின் 95வது ஆண்டு விருது விழாவானது சிறப்புற நடைபெற்று வருகிறது. சிறந்த பாடல் என்ற வரிசையில் இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு பாடல் பரிந்துரை பட்டியலில் இருந்தது. தற்போது ஆஸ்கார் விருதினை இப்பாடல் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய அளவிற்கான பெருமை கிட்டியுள்ளது. இந்தப் பாடல் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ஆணிவேராகவே இருந்து வந்தது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் தங்களுடைய நடனத் திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்கள். நாட்டு நாட்டு பாடலின் உண்மையான நாயகன். இதற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி ஆவார். இவர் தெலுங்கு இசையுலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் இசையுலகைப் பொறுத்தவரை இவர் மரகதமணி என்று அழைக்கப்படுகிறார்.
இயக்குநர் ராஜமவுலி தான் இயக்கும் பெரும்பான்மையானத் திரைப்படங்களுக்கு கீரவாணியைத் தான் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளராக பயன்படுத்தியிருக்கிறார். தன்னுடைய நான் ஈ, பாகுபலி முதல் பாகம், இரண்டாம் பாகம் தற்போது ஆர்.ஆர்.ஆர் வரை ராஜமவுலி கீரவாணியையே பயன்படுத்தி வந்திருக்கிறார். கடந்த வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலைப் பெற்ற இந்திய படங்களை எடுத்துக்கொண்டால் அதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. சுதந்திரப் போராட்டத்தை ராமாயணக் கதைகளத்துடன் கொஞ்சம் புனைந்து படைத்திருந்தார் ராஜமவுலி. திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. முக்கியமாக இந்த நாட்டு நாட்டு பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தற்போது இப்பாடலுக்கு விருது கிடைத்திருப்பது நாட்டிற்கு மிகப் பெரிய கவுரவம். ஏ.ஆர். ரகுமானிற்கு பிறகு ஒரு தென்னிந்திய இசையமைப்பாளர் இவ்விருதினைத் தற்போது பெற்றிருக்கிறார்.