சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடம்

கடலூர் மாவட்டத்தில், சேதமடைந்து விழும் நிலையில் இருக்கும் அரசு பள்ளி கட்டடத்தை இடித்து, புதியதாக கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளியின் கட்டடம் ஏறக்குறைய முழுமையாக சேதமடைந்துள்ளதால், மாணவர்களை வகுப்பறையில் அமர வைத்து பாடம் நடத்துவதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஆங்காங்கே விரிசல் அடைந்தும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் காணப்படுவதால், ஆசிரியர்கள் பெரும்பாலும் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்தே பாடம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், சேதமடைந்த பள்ளி கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், அன்மையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளியில் ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பெற்றோர், உடனடியாக இந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித் தருமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version