தாய்மையை போற்றும் விதமாக தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப்பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
2020 கணக்கெடுப்பின்படி சுமார் 1 லட்சம் கர்ப்பிணிகளில் 152 பேர் கர்ப்பம், மகப்பேறு தொடர்பான பிரச்சனைகளால் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கர்ப்ப காலங்களில் தாய், குழந்தையின் உயிர்க்குப் பாதிப்பு தருகிற அல்லது அவர்களை ஊனமாக்கும் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு, கர்ப்ப காலம், மகப்பேறு காலம் ஆகியவை குறித்த மருத்துவ விழிப்புணர்வு அவசியம் தேவை. அந்தக் காலகட்டங்களில் தேவைப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, பேறுகாலத்தில் தேவைப்படும் அவசர வசதிகள், பேறுகாலத்துக்குப் பின் தேவைப்படும் வசதிகள் போன்றவை குறித்த தெளிவான அறிவும் புரிதலும் ஏற்படுத்தவே மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கஸ்தூரிபா காந்தியின் பிறந்த நாளான ஏப்ரல் 11 ஆம் தேதியை தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை சமூக ரீதியாக அறிவித்த உலகின் முதல் நாடு இந்தியா. இது பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய சேவைகளின் போது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைப்பது மற்றும் போதுமான அணுகல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும், பாதுகாப்பான தாய்மை தினத்தை செயல்பாடுகள் மற்றும் முழு அளவிலான பிரச்சாரங்கள் மூலம் WRAI உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த வருடாந்திர பிரச்சாரங்களின் குறிக்கோள், ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் முறையான சிகிச்சை பெற உரிமை உண்டு என்ற விழிப்புணர்வை அதிகரிப்பதாகும்…
– சைய்யது இப்ராஹிம் முபாரக், செய்தியாளர்.
Discussion about this post