பசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொது. பிணியால் இறந்தவர்களைவிட, பசியாலும் பட்டினியாலும் இறந்தவர்களே உலகில் அதிகம். போர், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மக்களுக்கு போதுமான அளவு உணவு கிடைக்காமல், பரிதாபமாக உயிரிழந்த வரலாறு எல்லாம் நம் உலகில் நிகழ்ந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சரியான உணவு வகைகள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மனிதர்கள் இறந்துபோகும் நிலை ஏற்பட்டது. இது பிஞ்சு குழந்தைகளையும் தாக்கும் நிலை உருவானது. ஊட்டச்சத்து குறைபாட்டால், குழந்தைகளுக்கு குவாஷியோர்கர், மராஸ்மஸ் போன்ற ஊட்டச்சத்து குறைப்பாட்டு நோய்கள் ஏற்படுகின்றன. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தாலும், இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மூன்றாம் நிலை நாடுகளில் இது ஒரு தலையாயப் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலை இந்தியாவிலும் நீடிக்கிறது என்பதுதான் வேதனை. இதனை சரிபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய ஊட்டச்சத்து வாரமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஊட்டச்சத்து வாரம்!
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் கடைபிடித்து வருகிறார்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் பொருட்டும், சத்தான உணவுப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் பொருட்டும் இந்த தேசிய ஊட்டச்சத்து வாரமானது ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கணக்கெடுக்கப்பட்ட பசி குறியீட்டு எண்ணிக்கையில் மொத்தம் 121 நாடுகளில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுதான் இறப்பிற்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை சரிபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1982 ஆம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் தேசிய ஊட்டச்சத்து வாரம் தொடங்கப்பட்டது. இந்த 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து வாரத்திற்கான தீம் என்பது, “ஆரோக்கியமான உணவு முறை அனைவருக்கும் மலிவு” என்பதாகும்.
Discussion about this post