மனிதர்களுக்குள் மனிதாபிமானம் என்ற கருத்து வேர் ஊன்றி துளிர்விட காரணம் சேவை மனப்பாண்மை என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட சேவைகள் ஆயிரம் உண்டு நம் உலகில். மேலும் இந்தியாவை உலக அளவில் தூக்கி நிறுத்தும் துறைகளை முதன்மைத் துறை (வேளாண்மை), தொழில்துறை மற்றும் சேவைத்துறை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சேவைத்துறையிலும் முதன்மை என்னவென்றால் அதுதான் மருத்துவம்.
உலக நாடுகள் பல ஜூன் 30-ம் தேதியில் மருத்துவர்கள் தினத்தினை கொண்டாடுவார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு பி.சி.ராய் என்கிற இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்தான் காரணம். அவரின் பிறந்தநாளின் நினைவாக இந்த தினம் இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பிகாரில் பாட்னாவில் உள்ள பரங்கிப்போர் என்கிற சிற்றூரில் 1882 ஆம் ஆண்டு ஜூலை 1ல் பிறந்தவர்தான் பிதான் சந்திர ராய் என்கிற பி.சி.ராய். இவர் தன் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சேவைக்கே தன்னை அர்பணித்துக்கொண்டார். இலவசமாக மருத்துவம் செய்தார். பல மருத்துவமனைகளை ஏழை எளிய மக்களுக்காக அன்று கட்டினார். இந்த கால 2-கே குழந்தைகளுக்கு புரியுமாறு சொன்னால், அவர் அந்த கால அஞ்சு ரூபா டாக்டர் என்று சொல்லலாம். ஜடவ்பூர் டிபி மருத்துவமனை, கமலா நேரு மருத்துவமனை, விக்டோரியா மருத்துவக் கல்லூரி, சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை போன்றவைகள் பி.சி.ராய் அவர்களின் முயற்சியால் நிறுவப்பட்டவை.
மேலும் பி.சி.ராய் காந்தியடிகளின் உற்ற நண்பராய் இருந்து, சுந்தந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இவர் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் இருந்திருக்கிறார். ஆம் மேற்கு வங்க மாநிலத்தில் 12 ஆண்டுகள் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இத்தகைய தன்மையினால் பி.சி.ராய் க்கு 1961 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது பெயரில் பி.சி.ராய் விருது என்று மருத்துவத் துறையில் சிறந்த முறையில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதேபோல வருடா வருடம் ஜூலை 1 ஆம் தேதி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.