தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். பின்னர் மக்களவையில், இதுகுறித்து விளக்கமளித்த அமித்ஷா, இந்த சட்ட திருத்தம் எந்த மதத்தினருக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல என்று குறிப்பிட்டார். மேலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதப்பிரச்சனைக்கு ஆளானோர்கள் இந்தியாவில் குடியேறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கிறிஸ்தவர், இஸ்லாமியர், ஜைனர், பார்சீகர், சீக்கியர் உள்ளிட்ட மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும் என்று அவர் கூறினார். அதன்படி 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும் என்றும், அப்படி அகதிகளாக வந்தவர்கள் அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் குறித்த ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்த சட்ட திருத்த மசோதா மூலம், இந்திய குடியுரிமை பெறும் ஆண்டுகள் 11ல் இருந்து 6 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 1 கோடியே 75 லட்சம் பேர் பயனடைய உள்ளதாகவும் அமித் ஷா விளக்கமளித்தார்.
இதனிடையே, தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து விவாதிக்க 293 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 293 ஆதரவாகவும், மசோதாவை தாக்கல் செய்ய 82 எம்.பி.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.