அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தினை 1969 ஜூலை 16 ஆம் தேதி தொடங்கியது. நாசாவின் கென்னடி விண்வெளி மையத்த்தில் இருந்து சாட்டர்ன் ஃபைவ் எஸ் ஏ 506 ரக ராக்கெட் மூலம் நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கெல் காலின்ஸ் ஆகிய மூவரும் நிலவுக்கு பயணித்தனர்.
நான்கே நாட்களில் நிலவை அடைந்த நாசா..!
ஜூலை 16 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிலவுப் பயணமானது ஜூலை 20ம் தேதி நிறைவடைந்தது. அதாவது அன்று காலை 8:32 மணிக்கு நிலவின் மேற்பரப்பை அப்பல்லோ 11 அடைந்தது. மொத்த பயண நேரம் 102 மணி 45 நிமிடங்கள் ஆகும். முதற்கட்டமாக மைக்கேல் காலின்ஸ் சந்திரனைச் சுற்றி வரும் கட்டளைத் தொகுதியிலிருந்து பணிகளை மேற்பார்வையிட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆகிய இருவரும் சந்திரனில் இருந்து பிரிந்த ‘ஈகிள்’ எனும் லேண்டர் தொகுதியில் இறங்கினர். நிலவில் கால்வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்றால், இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்ட்ரின் ஆவார். அங்கு மண் மற்றும் கற்களை சேகரித்த பின்னர், ஜூலை 21 ஆம் நாள் பூமிக்கு திரும்பும் பயணத்தை விண்வெளி வீரர்கள் தொடங்கினார்கள். ஜூலை 24 ஆம் தேதி விண்வெளி வீரர்களுடன் வடக்கு பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக அப்பல்லோ 11 தரையிரங்கியது.
பூமியில் இருந்து நிலவுக்கு சென்று, பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பி வருவதற்கு நாசாவுக்கு வெறும் எட்டு நாட்கள் 3 மணி நேரம் மட்டுமே ஆனது. ஆனால் இந்தியா சார்பாக இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் -3 ஆனது ஆளில்லா விண்கலம் மற்றும் லேண்டரை மட்டும் தான் நிலவுக்கு அனுப்ப உள்ளது. ஆனால் இந்த விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நீண்ட நாட்கள் பயணத் திட்டத்திற்கு என்ன காரணம்?
ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்களை பயன்படுத்துவதன் பின்னணி!
நமது இஸ்ரோவின் சந்திரயான் – 3 இன் இந்த நீண்ட பயணத் திட்டத்திற்கு பின்னால் பல தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு நாசா ஏவிய அப்பல்லோ 11 ராக்கெட்டின் எரிபொருள் உட்பட 2800 டன் எடை கொண்டது. ஆனால் இஸ்ரோ தற்போது விண்ணில் செலுத்த உள்ள சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் எடையானது எரிபொருளுடன் 640 டன்கள் மட்டுமே.
இங்கு நிலவுக்குச் செல்லும் உந்துத் தொகுதியானது 2148 கிலோ எடை கொண்டதாக உள்ளது. மேலும் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகளின் பகுதி 1752 கிலோ எடை கொண்டதாக உள்ளது. அதாவது சந்திரயான் -3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் விண்கலம் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களின் மொத்த எடை 4 டன்கள். இஸ்ரோவின் ராக்கெட்களில் 4 டன்கள் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஒரே ராக்கெட் ஜிஎஸ்எல்வி மார்க் 3 மட்டும் தான்.
அதாவது இந்தியாவைப் பொறுத்தவரைச் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் இந்த அளவுக்கு எடையை சுமந்து செல்லாது. அதற்கு காரணம் செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதுடன் அவற்றின் பணி முடிந்துவிடும். ஆனால் இந்தச் சந்திரயான் திட்டம் முற்றிலும் மாறுபட்டது. இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட், விண்கலம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும், எரிபொருளுடன் சுமந்து பயணிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, நிலவுக்கு விண்கலங்களை அனுப்புவது போன்ற முக்கியமான ஆய்வுகளுக்கு ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எரிபொருளை அதிகம் எடுத்து செல்லும் நாசா :
நாசா விண்ணில் ஏவிய ராக்கெட்கள் அனைத்தும் அதிக எடை கொண்டவையாக இருந்துள்ளன. பூமியின் சுற்றுப்பாதையை கடந்தபின், அப்பல்லோ 11 இன் எடை 45.7 டன்கள். இந்த மொத்த எடையில் எரிபொருளின் எடை மட்டும் 80 சதவீதமாக இருந்ததுள்ளது. குறிப்பாக, அப்பல்லோ 11 விண்கலத்தில் இருந்த ஈகிள் லேண்டரானது நிலவில் தரையிறங்கிய பிறகு, விண்வெளி வீரர்கள் அதில் கால்பதித்து ஆய்வு செய்து முடித்து, மீண்டும் பூமிக்கு திரும்ப இவ்வளவு எரிபொருள் அன்றைக்கு தேவைப்பட்டது.
இதை கருத்தில் கொண்டே, அப்பல்லோ 11 விண்கலம், சார்ட்டன் ஃபைவ் எஸ்ஏ 506 என்ற சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி வீரர்களுடன் இவ்வளவு அதிகமான எரிபொருளை எடுத்து செல்ல, மிகப்பெரிய ராக்கெட் பயன்படுத்தப்பட்டதால் தான் அப்பல்லோ 11 விண்கலம் நான்கே நாட்களில் நிலவுக்கு நேரடியாக சென்றடைய முடிந்தது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.