மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு

2024 ஆம் ஆண்டில் பெண்களை நிலவுக்கு அனுப்ப, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா முடிவுசெய்துள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா அப்போலோ 11 என்ற விண்கலத்தின் மூலம் முதன் முதலில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிவைத்தது. இதற்கு பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டாத நாசா தற்போது 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ‘ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆர்ஜின்’ உள்ளிட்ட தனியார் விண்வெளி அமைப்புகள் இன்னும் சில வருடங்களில் புதிய விண்கலன்களையும், மனிதர்களை ஏற்றிச் செல்லக் கூடிய விண்கலன்களையும் விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகின்றன.

இதனையடுத்து, நாசாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மீண்டும் தொடங்கியுள்ளதோடு, 2024 ஆம் ஆண்டு பெண்களை நிலவுக்கு அனுப்பி அங்கேயே தங்கி ஆராய்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

நிலவிற்கு முதல் முறையாக பெண்கள் செல்லவிருப்பதால் இந்த திட்டத்திற்கு ‘கிரேக்க தொன்ம மரபின் படி அப்போலோவின் சகோதரியான ‘ஆர்டிமிஸ்’ என்று பெயரிட்டுள்ளது நாசா. மேலும், இந்த திட்டத்திற்காக 8 பில்லியன் டாலர்களை நாசா, அமெரிக்க அரசிடம் கேட்டுள்ளது. இதற்கென முதற்கட்ட நிதியை ஒதுக்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கர்கள் மீண்டும் நிலவில் கால் பதிக்கப்போவதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version