இப்படியும் கால் பதிக்கலாம் நாசாவில் !

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு வயது 60 ஆண்டுகள். செயற்கரிய பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள நாசா இன்னும் பல சாதனை முயற்சிகளுக்கு சோதனையிட்டுக் கொண்டிருக்கிறது.இந்த வேளையில் மற்றோருப்புறம் நாசா 2019 ஆம் ஆண்டுக்கான காலண்டர் ஓவியங்களுக்கான போட்டிகளை நடத்தி முடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாத காலண்டர் வெளியிடும் நாசாவானது , 12 மாதங்களுக்கான 12 ஓவியங்களைப் பெற உலக அளவிலான போட்டிகளை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளது.இதில் தமிழகத்தை சார்ந்த மாணவனின் ஓவியமும் பங்கேற்று வெற்றிப்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Astronauts, Astronauts training,Space suits, Space craft, Rockets, Launch day in Florida, Intrenational space station, Living and working in space, Exploring the solar system, What would you take from house?, Space food, Returning to earth ஆகிய 12 மாதங்களுக்கான தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் “Space food” என்ற பிரிவில் பழனியைச் சார்ந்த தேன்முகிலன் என்ற மாணவனின் ஒவியம் இடம் பெற்றுள்ளது.

மாணவன் தேன்முகிலன் பழனி வித்யாமந்திர் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த ஆண்டு இதே பள்ளியை சார்ந்த 2 மாணவர்களின் ஓவியங்கள் நாசா மாத காலண்டரில் இடம்பெற்று சாதனைப் படைத்தது.

194 நாடுகளைச் சார்ந்த 4 முதல் 12 வயதுக்குட்பட்ட லட்சணக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் தேன்முகிலனின் ஓவியம் நவம்பர் மாதத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழில் “விண்வெளியில் உணவு” என்ற தலைப்பிட்ட அந்த ஓவியத்தில் மாணவர் தேன்முகிலன்,  ” விண்வெளியில் சந்தை என்பது இல்லை. எப்பொழுதெல்லாம் புதிய பொருட்கள் தேவைப்படுகிறதோ , அப்பொழுதெல்லாம் விண்வெளி மையத்திலிருந்து அனுப்பப்படுகிறது. அவை புதிதாக பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் பழங்களாக இருப்பதால் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கும். விண்வெளியில் வீரர்களுக்கு பயிர்களை வளர்க்கும் இலக்கு உள்ளது. இது அவர்களின் ஊட்டச்சத்துக்கு உதவும்.மேலும் இத்தகைய செயல்கள் மூலம் வீரர்கள் விண்வெளியை பூமியாக நினைக்க செய்வார்கள்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

விண்ணுக்கு சென்று தான் சாதனைகள் படைக்கலாம் என்பது இல்லை. மண்ணில் இருந்தே விண்ணில் சாதனைகள் படைக்கலாம்.

சாதிக்க பல வழிகள் உண்டு.ஒருவழி இல்லையென்றால் மற்றோரு வழி.சரியான உற்சாகப்படுத்துதல் இருந்தால் நாளை உங்கள் வீட்டு பிள்ளையும் விண்ணில் கால் பதிக்கும்.

Exit mobile version