இந்திய நாட்டின் பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்த விழாவில் 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 6,000 பேருக்கு மேல் விருந்து அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற கோலாகல விழாவில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்றனர். வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீத், கிர்கிஸ்தான் அதிபரான சூரன்பே ஜீன்பேகோவ், மியான்மர் அதிபர் யு வின் மின்ட் மற்றும் மொரிசியஸ் அதிபர் பிரவிந்த் குமார் ஜகனத், நேபால் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், தாய்லாந்தின் சிறப்பு தூதர் க்ரிசாடா பூன்ராச், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன் அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், மனோ கணேசன், ராயூப் ஹக்கீம், செந்தில் தொண்டமான் ஆகியோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.