நாமக்கல்லில், முட்டை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 20 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கலில் 4,50,00,000 முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைகளுக்கான விலையை நாள்தோறும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இன்று திடீரென 20 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை விலை 5 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளாக அதிகரித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 மாத காலமாக முட்டை விற்பனை அதிகரித்து வருவதாகவும், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முட்டைக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் காலங்களில் முட்டை விலை 6 ரூபாய் வரை அதிகரிக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.