நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 117 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியும், 157 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனையும் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து, 134 கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பில், 33 ஆயிரத்து 441 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதேபோல், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 155 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.

Exit mobile version