நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற உரிமைக்குரல் விவாத நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, அவர் தமிழகத்திற்கு, குறிப்பாக பெண்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி அவர்கள் பேசினார். அவர் பேசிய சாராம்சம் பின்வருமாறு உள்ளது.
அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி :
பெண்களுக்காக இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட ஒரு தலைவர் இந்த அளவிற்கு நலத் திட்டங்களை எந்த ஒரு தலைவரும் கொண்டுவரவில்லை. புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம் அவரது ஆடை அலங்காரம். ஒரு பெண்ணாக எனக்கு அவர்களது ஆடை அலங்கரிப்பின் நுண்ணுணர்வுகள் புரியும். எந்த ஒரு பகட்டும் இல்லாமல் அவரது ஆடை அலங்காரம் எளிமையாக இருக்கும். அதே சமயம் ஆளுமைப் பண்பினை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அவரது ஆடை அலங்காரத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுதான் தற்போதைய மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, புரட்சித் தலைவியைப் போலவே ஆடை அணிகிறார்.
உலக அரசியலிலே ஒரு பெண் தலைவர் இலக்கியவாதியாகவும், பாடாகராகவும், பரதநாட்டிய கலைஞராகவும், அரசியல்வாதியாகவும், சிறந்த நாவலாசிரியராகவும் இருந்தது இவர் மட்டும்தான். இதைவிட சிறப்பு என்னவென்றால் ஜெ அவர்கள் பலமொழிகளை சரளமாக பேசக்கூடியவர். தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என்று பலமொழிகளில் ஆளுமை செலுத்தக்கூடியவராக இருந்தார். நன்றாக பாடக்கூடியவரான ஜெ அவர்கள் ஹிந்தி மொழியில்கூட அற்புதமாக பாடக்கூடியவர். செமி கேரவலுடனான பேட்டியில் கூட ஹிந்திப் பாடல் ஒன்றினைப் பாடியிருப்பார். இவற்றையெல்லாம் கடந்து செல்வி ஜெயலலிதா எனும் ஒரு ஆளுமை பெண்களிடத்திலே ஏற்படுத்திய தாக்கம் என்று ஒன்று உண்டு. நாச்சியாள் சுகந்தி என்கிற என்னைப்போன்ற ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்தப் பெண் இன்றைக்கு நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் அமர்ந்து உங்களுடன் விவாத மேடையில் உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதா என்கிற ஒரு ஆளுமை கொடுத்த தூண்டுகோல்.
அரசியலைப் பொறுத்தவரை உணர்வுப்பூர்வமாக யார் யோசிக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான தலைவர். அரசியலில் அவர் பெண்களுக்காக கொண்டுவந்த மாற்றங்கள், சமுதாயத்தில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் என்று பலவற்றை அறிமுகப்படுத்தினார். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அவர்தான் கொண்டுவந்தார். அதன்விளைவாக இன்றைக்கு பல உள்ளாட்சி நிர்வாகப் பொறுப்புகளில் பெண்கள் அதிக அளவிற்கு உள்ளனர். ஏன் திமுகவை சேர்ந்த ப்ரியா எனும் பெண் இன்றைக்கு சென்னையின் மேயர் ஆனதற்கு காரணமே அன்றைக்கு ஜெ அவர்கள் கொண்டுவந்த இடஒதுக்கீடு தான். உலக அரசியலிலே மகளிர் நலன்காக்க மகளிருக்கான காவல்நிலையம் அமைத்துகொடுத்தவர் ஜெயலலிதா அவர்கள்தான். இதைவிட நுண்ணியமான் ஒரு திட்டம் என்னவென்றால் சிறையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு நாப்கின் இலவசம். இப்படி யார் யோசிக்க முடியும். இதுதான் மனிதநேயத்தின் மாண்பு. பள்ளியில் நாப்கின் கொடுக்கலாம், கல்லூரியில் நாப்கின் கொடுக்கலாம். ஆனால் சிறையில் உள்ள பெண்களுக்கு யார் தருவார். அதை நிகழ்த்திக் காட்டியவர் அவர்.
இரண்டாவதாக, பெண்களுக்கு அவர் சைக்கிள் கொடுத்தது மிகவும் முக்கியமானது. யாருடைய தடையின்றியும் சுதந்திரமாக சைக்கிளில் பெண்கள் பள்ளிக்கு சென்றுவர காரணம் அவர்தான். பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்பாதவர்கள், சைக்கிள் கொடுத்ததால் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். இதுதான் தொலைநோக்குப் பார்வை. அதேபோல் ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியது சிறப்பான ஒன்று. பணக்காரர்கள் மட்டும்தான் மடிக்கணினி வைத்திருப்பார்கள் என்று சொல்லப்பட்டு வந்ததை உடைத்து ஏழை மாணவர்களின் கைக்கும் கொண்டு சேர்த்தார் ஜெ அவர்கள். ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் குழந்தைக்கு என்ன தேவை என்று தெரியும் சொன்னவர் ஜெ. அதனால் தான் லட்சம் பேர்,கோடி பேர் அவரை அம்மா என்று அழைக்கிறார்கள். அதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து, பெண் பிள்ளைகள் பிறந்தால் அவர்களின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட், குழந்தைப் பிரசவத்திற்கு பிறகு 16 பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டி போன்ற பல நலத்திட்டங்கள் கொண்டுவந்தார். பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கொண்டுவந்து தமிழ்நாட்டில் வரதட்சணைக் கொடுமையை முற்றிலும் ஒழித்தவர் ஜெயலலிதா அவர்கள்.
வீரதீர செயல்களுக்காக கல்பனா சாவ்லா பெயரில் விருது, ஒளவையார் பெயரில் விருது போன்றவற்றை செய்தவர் ஜெயலலிதா அவர்கள். சமூகநீதி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியே கொண்டுவரதா 69% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் என்று தனது கருத்தினை பதிவுசெய்தார் அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி.