கவிதையாய் மாறிப்போன பேரன்பின் ஆதி ஊற்று.. கவிஞர் நா.முத்துக்குமார்!

இசை என்று சொன்னவுடன் நமக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று ஒரு லெஜெண்ட்களின் பட்டியலையே கூறமுடியும். அதன் வரிசையில் பாடலாசிரியர்கள் என்று சொல்லும்போது கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலில் நா.முத்துக்குமார் என்கிற மகத்தான கவிஞருக்கு என்றைக்குமே இடம் உண்டு. ஆம் காலத்தால் அழிந்தும் உள்ளத்தால் வாழ்ந்தும் பல இளைஞர்களின் செவிகளுக்கும் மனதிற்கும் தெம்பு அளிக்கும் வரிகளை விட்டுச்சென்று போயிருக்கிறார் நா.முத்துக்குமார்.

இளைய சமுதாயத்திற்கான பாடலாசிரியர்!

நா.முத்துக்குமார் அவர்கள் வரிகளுக்காக அதிகம் மெனக்கெடும் நபராக இருந்துள்ளார். காலப்போக்கில் வரிகள் வந்து அவர் விரல்களுக்குள் குவிந்துவிட்டன. புதுப்பேட்டை படத்தில் “ஒருநாளில் வாழ்க்கை” பாடலை தங்களது காலர் டியூனாக வைத்திருக்காத இளைஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் உத்வேகத்தினைக் கொடுக்கும். தனிமை விரும்பிகளுக்கான அல்லது அன்பிற்காக ஏங்கும் இதயம் கொண்டவர்களுக்கான பாடலாசிரியராகவும் நா.முத்துக்குமார் இருந்துள்ளார். தரமணி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “யாரோ உச்சிக்கிளை மேலே” பாடலை அதற்கு உதாரணமாக சொல்லலாம். “அடி கண்ணீரில் கண்கள் கலங்கும்போது நீ வந்தாயே, உன் தோளில் நானும் சாயும்போது நீ என் தாயே” போன்ற வரிகள் காலத்தால் அழியாதவை. அவருக்கு இரண்டு பாடல்கள் தேசிய விருதினைப் பெற்று தந்து இருக்கிறது. ஒன்று தங்க மீன்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை” பாடல். இந்தப் பாடலைப் பற்றி இயக்குநர் ராம் கூறும்போது,  இந்தப் பாடலின் காட்சியமைப்பினால் இந்தப் பாடல் தந்தை மகளுக்கான பாடலாக மாறிவிட்டது, ஆனால் அன்பு வைத்துள்ள ஒவ்வொரு உறவுக்கும் இந்தப் பாடல் பொருந்தும் என்று பேசியிருப்பார். “கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி” போன்ற வரியெல்லாம் நமக்கு ஆசிர்வாதமூட்டக்கூடிய வரிகள். அதனைத் தொடர்ந்து சைவம் திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகே அழகே” பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது.

முக்கியமாக இசையமைப்பாளர் யுவனுடன் சேர்ந்து பல ஹிட்ஸ்களை நா.முத்துக்குமார் தமிழ் சமுதாயத்திற்கு அருளியிருக்கிறார். காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என்று பலப் படங்களின் வெற்றிக்கு யுவனின் இசையுடன் நா.முத்துக்குமாரின் வரிகளும் வலு சேர்த்தன. இன்றைய இளைய சமூகத்தினர் யுவனை கொண்டாடுவதற்கு நா.முத்துக்குமாரின் வரிகளும் ஒருவித காரணம் தான்.

எழுத்தாளராக…!

நா.முத்துக்குமாருக்கு தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு மிகப்பெரிய மரியாதை உண்டு. அதற்கு காரணம் அவர் தமிழ் இலக்கிய உலகில் இருந்துதான் கோடம்பாக்கத்திற்கு சென்றார். நா.முத்துக்குமார் கவிதைகள் என்றே ஒரு தொகுப்பு உள்ளது. அதில் நவீன காலத்திய கவிதைகள் பலவற்றை எழுதியிருப்பார். அதிலும் குறிப்பாக தூர் எனும் கவிதை பிரபலமானது.

தூர்

“வேப்பம் பூ மிதக்கும்

எங்கள் வீட்டு கிணற்றில்

தூர் வாரும் உற்சவம்

வருடத்துக்கு ஒரு முறை

விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்

அப்பா முங்க முங்க

அதிசயங்கள் மேலே வரும்…

கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,

துருப்பிடித்தக் கட்டையோடு

உள் விழுந்த ராட்டினம்,

வேலைக்காரி திருடியதாய்

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…

எடுப்போம் நிறையவே!

 

‘சேறுடா சேறுடா’ வென

அம்மா அதட்டுவாள்

என்றாலும்

சந்தோஷம் கலைக்க

யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்

தலைநீர் சொட்டச் சொட்ட

அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா

கதவுக்குப் பின்னிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்

மறந்தேப் போனார்

மனசுக்குள் தூர் எடுக்க..!”

– நா.முத்துக்குமார்

 

வேடிக்கை பார்ப்பவன், அணிலாடும் முன்றில், கண்பேசும் வார்த்தைகள் போன்ற நூல்களையும், ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தும் உள்ளார் நா.முத்துக்குமார். திரைப்படப் பாடல்களைக் கடந்து அவரது தனிப்பட்ட எழுத்திற்கு என்று ஒரு தனிப்பட்டாளமே உண்டு. இன்னும் சில காலம் இருந்து இசை ரசிகர்களை மகிழ்வித்து சென்றிருக்கலாம் என்பதே பலரது எண்ணக் குமுறலாக இருக்கிறது. ஒவ்வொரு ரசிகனுக்கும் அவருடன் கதைப் பேசிக்கொண்டே காற்றோடு போகத்தான் ஆசை! இன்று அவருக்கு 48 வது பிறந்தநாள் ஆகும். நம் அனைவருக்காகவும் எழுதிய நா.முத்துக்குமார் தற்போது கவிதையாய் மாறிப் போயிருக்கிறார்.

 

Exit mobile version