தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை தாண்டியுள்ளதால், 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை, மஞ்சளாறு, சண்முகாநதி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பாதுகாப்பு கருதி அணைகளுக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது.
5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியை தாண்டியது. அணைக்கு நீர் வரத்து 2 ஆயிரத்து 337 கனஅடியாகவும், தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆயிரத்து 640 கனஅடியாகவும் உள்ளது.
இதேபோல், தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 14 அடியை எட்டியுள்ளது. காமராஜர் அணை, திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.