டெல்லி, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களில் பலர், கறுப்பு பூஞ்சை தொற்று என்ற நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
வடமாநிலங்களை அச்சுறுத்தி வரும் இந்த நோய் கண்பார்வை இழப்பு முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், லேசான அறிகுறிகளுடன் குறைந்தபட்ச மருத்துவ சிகிச்சையிலேயே குணமடைந்து விடுகின்றனர்.
ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை மோசமாகி தீவிர சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று குணமடைபவர்களுக்கு mucormucosis நோய் எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்று மற்றொரு ஆபத்தாக உருவெடுத்துள்ளது.
காற்றில் சர்வ சாதாரணமாக காணப்படும் இந்த ரக பூஞ்சைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் உடலில் எளிதாக தொற்றுகிறது.
மனித உடலில் நுழைந்து நுரையீரல், கண், தோல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மகாராஷ்ட்ரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் மட்டும், கடந்த 15 நாட்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், 8 பேர் கண் பார்வையை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் டெல்லியிலும், பொதுமக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்கள் சிவப்பது, கண்களில் நீர் வடிவது, கடுமையான தலைவலி உள்ளிட்டவை இந்த தொற்றின் அறிகுறிகளாகும். கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடலில், இரண்டு அல்லது மூன்று நாட்களில், கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலில் சைனஸ் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த ரக பூஞ்சை, அப்படியே பயணித்து மூளை வரை சென்று தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிப்பின்றி தப்பிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
Discussion about this post