ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்தை சீரமைப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். அதே போல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் குழு அமைத்து போக்குவரத்து சீரமைப்பு குறித்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளின்படி ஆம்னி பேருந்துகளுக்கு இவ்வளவுதான் கட்டணம் என்று நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறிய அவர் சீசன் இல்லாத காலங்களில் குறைந்த கட்டணத்தையும், பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணமும் வாங்குகின்றனர் என்றார்.
அதே நேரம் மக்களை பாதிக்கும் அளவுக்கு கட்டண உயர்வு இருந்தால் ஆம்னி பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.