வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
வேளாண் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும், துணைத்தலைவர் ஹரிவன்ஸ் சிங் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியாது என்றும், இதுபோன்ற தீர்மானம், நாடாளுமன்ற விதிகளின் கீழ் வராது என்றும் தெரிவித்தார்.
மேலும், வேளாண் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ பிரையன், தோலா சென், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சதவ், சையது நாசீர் ஹூசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராகேஷ், இளமரம் கரீம் ஆகிய 8 பேர் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள், அவையில் இருந்து வெளியேறாமல் முழக்கங்களை எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.-க்கள் அவையை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். வேளாண் திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் அவையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று, மாநிலங்களவை துணைத் தலைவர் புவனேஸ்வர் கலிதா அறிவுறுத்தினார். எம்.பிக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, அவையை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் புவனேஸ்வர் கலிதா அறிவித்தார்.