நிர்வாகிகள், தொண்டர்கள் நிறைந்திருந்த பொதுக்கூட்ட மேடையில், உதயநிதியை திமுக எம்.பி டி.ஆர் பாலு எச்சரித்த சம்பவம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி பாணியில் உதயநிதியை எதிர்க்க தொடங்கவிட்டனர் திமுக சீனியர்கள்… என்ன நடக்கிறது திமுகவில் ? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தம்பி … வாயிருக்குனு இஷ்டத்துக்கு பேசாதீங்க… கொஞ்சம் அடக்கி வாசிங்க.. என்று உதயநிதியை மறைமுகமாக எச்சரித்துள்ளார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ! வேலூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய டி.ஆர் பாலு…, எதை வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு பின்னர் சமாளித்துக்கொள்ளலாம் என உதயநிதி நினைப்பதாகக் கூறினார். தன் கையில் இருக்கும் பொருளை கீழே போட்டு உடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என உதயநிதியை எச்சரித்துள்ளார். உதயநிதியின் பேச்சால் இந்தியா கூட்டணி தலைவர்களே கடும் அதிர்ப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். ஸ்டாலினின் மகன் என்கிற ஒற்றை காரணத்திற்காக இதுவரையில் உதயநிதியின் எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசாத சீனியர்கள்… இப்போது நேரடியாக சொல்லமுடியவில்லை என்றாலும் மறைமுகமாக உதயநிதியை வசைபாடத்தொடங்கியுள்ளனர். அதிலும் பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகிகள், தொண்டர்களின் மத்தியில் டி.ஆர்.பாலு பேசிய பேச்சு ஸ்டாலினை எரிச்சலடைய வைத்துள்ளது. டி.ஆர்.பாலு காரணமில்லாமல் கொந்தளிக்கவில்லை.
சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். வட இந்தியாவில் சனாதனம் என்றால் இந்துமதம் என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. உதயநிதி இந்த பேச்சு இந்து மதத்திற்கு எதிரானது என வட இந்திய கட்சிகளும் அமைப்புகளும் கொந்தளித்தன. திமுகவின் கூட்டணி கட்சிகளே உதயநிதியை கடுமையாக கண்டித்தன. ஆனால் அதை கொஞ்சமும் உணராத உதயநிதி கொசுபத்தி சுருள் படத்தை வெளியிட்டு விளையாடிக்கொண்டிருந்தார். உதயநிதியின் தயவில் அரசியலில் கால் பதித்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் போன்ற சிலர் “ நீ விளையாடு நண்பா “ என ஏத்திவிட… ஏதையோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்ற நினைப்பில் மிதக்கத்தொடங்கினார் உதயநிதி…
ஆனால் உதயநிதியின் இந்த பேச்சால் கூட்டணிக்குள் பெரும் குழப்பமே வந்துவிட்டது. மம்தா தொடங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை பல தலைவர்கள் கூட்டணியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தனது மகனின் விளையாட்டு பேச்சு விபரீதமானதை உணர்ந்த ஸ்டாலின், இப்போது பேசுவதற்கு நிறைய இருக்கிறது அதை பற்றி பேசலாம் என்பது போல அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூட்டணிக்கட்சி தலைவர்களை சமாதானம் செய்தார். இருந்தாலும் டெல்லி அரசியலில் இருக்கும் திமுக சீனியர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
ஸ்டாலினின் மகன் என்பதற்காக இளைஞர் அணியை கொடுத்தோம், ஸ்டாலின் விரும்பினார் என்பதற்காக அமைச்சராக்க ஒப்புக்கொண்டோம், ஸ்டாலின் கட்டாயப்படுத்துவதால் உதயநிதியை முன்னிலைபடுத்துகிறோம். ஆனால் அரசியல் அனுபவமின்றி எப்போது எதை பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் உதயநிதி உளறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டு சீனியர்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என உதயநிதி செயல்படுவதால்தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சால் டெல்லி அரசியலில் செல்வாக்கை இழந்துவிட்டோம் என திமுக சீனியர்கள் கொதித்துக்கொண்டு உள்ளனர்.
அதன் வெளிப்பாடுதான் டி.ஆர்.பாலுவின் பேச்சு என்கிறார்கள் உள்விவகாரங்களை உணர்ந்தவர்கள். ஸ்டாலின் எரிச்சலடைவார் என்பது தெரிந்தேதான் டி.ஆர்.பாலு எச்சரித்ததாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதிலிருந்து ஸ்டாலினும் அவரது தவப்புதழ்வரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஏற்கனவே டெல்லி அரசியலில் திமுகவின் முகமாக வலம் வரும் கனிமொழி, உதயநிதியை புறக்கணித்து வரும் நிலையில், டி.ஆர்.பாலு போன்ற மூத்த நாடளுமன்ற உருப்பினர் உதயநிதியை பொதுவெளியில் எச்சரித்திருப்பது திமுகவில் நிலவிவரும் அதிகார மோதலையும் கோஷ்டி அரசியலையும் அம்பலப்படுத்தியுள்ளது.