நாங்கள் ஆட்சி வந்துவிட்டால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று வாய்ச்சவாடல் விட்டு எடுத்த செயலை சரியாக முடிக்கத் தெரியாத நிர்வாக திறனற்ற அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது ஸ்டாலின் அரசு. காவிரி நதிநீர் விவகாரம், நீட் விவகாரம் என்று எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் தீர்வினை நோக்காமல், கள்ள மவுனமும் அரசியல் ஆதாயத்தையும் தேடி வருகிறது இந்த விடியா திமுக அரசு.
அதிமுக மதுரையில் நடத்திய பிரம்மாண்ட எழுச்சி மாநாட்டைப் பார்த்து நடுநடுங்கி போயிருக்கும் திமுக, அதனைப் போலவே தாங்களும் மாநாடு ஒன்றினை நடத்த திட்டம் வகுத்துள்ளது. எப்போதுமே அதிமுக கொண்டுவந்த திட்டங்களைத் தான் காப்பி அடிக்கும் என்றால், மாநாட்டையும் காப்பி அடிக்கும் அவலநிலைக்கு திமுக வந்திருக்கிறது. இந்த நிலையை நினைத்து பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இது ஒருபக்கம் இருக்க, ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம், காவிரி உரிமையை மீட்போம் என்று ஏக வசனத்திற்கு பேசிவிட்டு இப்போது அதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது இந்த விடியல் கும்பல். நீட்டை ஒழிக்க போலியான போராட்டம், காவிரி பிரச்சனையைத் தீர்க்க சொன்னால் மவுன விரதம் என்று தன்போக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது விடியா அரசு. குறுவை சாகுபடி பயிர்கள் கருகி போவதையும் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதையும் தன்னை டெல்டாக்காரன் என்று மார்தட்டிக் கூறும் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக அரசியலின் கேலிக்கூத்து.
ஆனால், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் சட்ட போராட்டங்கள் நடத்தி காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். அதேபோல அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவிரி விவகாரத்திற்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தையே 22 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். ஆனால் இந்த ஆளும் விளம்பர கும்பல் காவிரி பிரச்சனைக்கு வாய்திறக்காமல், தீர்வு காணாமல், அரசியல் பிழைப்புவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குவதிலும், அவர்களின் தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதிலும் முனைப்புக் காட்டும் திமுக, மக்கள் நலனில் எப்போது தீவிரம் காட்டும் என்பது கேள்வியே?
காட்சி மாறும்; ஆட்சி மாறும்.. நாடாளுமன்றத் தேர்தல் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுக்கும் என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை. ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஊருக்கெல்லாம் வெளிச்சமாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.