தேசிய கல்விக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கல்விக் கொள்கையில் மாநிலங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில ஆளுநர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். காணொலி மாநாட்டில், தமிழகம் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் கிராமங்கள், நகரங்களில் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளுக்கு பிறகே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவையும், திறனையும் வளர்ப்பதாகக் கூறிய பிரதமர், பெரும்பாலான மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உகந்ததாக இருக்கும் என்றும் மத்திய அரசின் தற்சார்பு இலக்கை ஊக்கப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். பெரும்பாலான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கல்விக் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வியில் பங்குண்டு எனவும் பிரதமர் கூறினார். மாணவர்களின் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சலை போக்கும் விதமாகவும், புத்தகத்தை தாண்டிய கல்வியையும் புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகள், திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன எனக் கூறிய பிரதமர், மாநிலங்களின் கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்படும் என்றார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு என அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டின் காலநிலைக்கேற்ப கல்வியிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Discussion about this post