பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில்தான் கூடுதலான அகலப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்.
நெல்லூர் – சென்னை இடையே கூடுதல் பயணிகள் ரயில் சேவையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நெல்லூரில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். நெல்லூரில் நடந்த இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவருடன் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். காணொலி காட்சியை வரவேற்க, சென்னை திருவொற்றியூரில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், சென்னை அக்கம்பேட்டையில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பயண சீட்டு முன்பதிவு மையத்தையும், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் நடை மேம்பாலத்தையும், கும்மிடிபூண்டியில் 2 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் சுரங்க பாதையையும் துவக்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைமையிலான ஆட்சியில் தான் வடமாநிலங்களையும், தென்மாநிலங்களையும் இணைக்கும் வகையில் கூடுதலான அகலப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.