ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார்-ராகுல்

ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய அவர், இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று ஆதரவு அளித்தார். பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

Exit mobile version