வங்கக்கடலில் வருகிற மே 8 ஆம் தேதி மோகா புயல் உருவாகிறது. இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புக் குறைவு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரங்களில் மழையானது ஆங்காங்கே பெய்தலால் வெப்பநிலை சற்று குறைந்தது. ஆனால் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரமானது தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலையானது அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையானது படிப்படியாக 2 டிகிரியிலிருந்து 4 டிகிரி அதிகரித்திருக்கிறது. இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது. இது நாளை ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த பகுதியாகவும், நாளை மறுநாள் திங்களன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக உருவாகிறது.
இந்தப் புயலுக்கு மோகா என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை சூட்டியது ஏமன் நாடு ஆகும். இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் மழைக்கு வாய்ப்புக் குறைவுதான் என்று வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. மாறாக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.