அருப்புக்கோட்டையை சேர்ந்த திருமணமான, பெண் காணாமல் போன வழக்கில் 8 மாதங்கள் கழித்து புதிய திருப்பமாக, அவரது கள்ளக்காதலனே கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப் பாறை பகுதியை சேர்ந்தவர் 21 வயதான சத்யபிரியா. இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வசந்த பாண்டி என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி ஏழு மாதங்களுக்கு பின்பு குழந்தை பெறுவதற்காக தாய் வீட்டிற்கு வந்த சத்யபிரியா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, குழந்தை பெற்ற பின்னும் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வேலைக்கு சென்ற சத்யபிரியா, வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், சத்யபிரியாவின் தந்தை, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சத்யபிரியா காணாமல் போன வழக்கை கடந்த 8 மாதங்களாக போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து வழக்கில் திருப்புமுனையாக, சத்யபிரியாவின் செல்போன் எண்ணிற்கு அடிக்கடி சாத்தூர் கம்மாச்சூரங்குடியைச் சேர்ந்த ஞானகுருசாமி என்பவர் பேசி வந்ததை அறிந்த போலீசார்,
அவரை பிடித்து நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில், சத்யபிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இருவருக்கும் கள்ளக்காதல் இருந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சத்யபிரியா, ஞானகுருவை வற்புறுத்தி வந்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என சத்யபிரியா மிரட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ஞானகுரு, சத்யபிரியாவை தனியாக அழைத்து சென்று அவரது துப்பட்டாவால், கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
ஞானகுருவை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்த காவல்துறையினர், அங்கு கிடந்த சத்யபிரியாவின் எலும்புக் கூட்டை சேகரித்து தடயவியல் துறை ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சத்யபிரியா காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஞானகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post