பட்ஜெட்டில் காணாமல் போன, மாதம் ஒருமுறை மின் கணக்கீடு அறிவிப்பு

தேர்தல் நேரத்தில், ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, மின் கட்டணம் மாதம் ஒருமுறை கணக்கிடப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, தற்போது பட்ஜெட்டில் அதனை பற்றி வாய் திறக்காததால், மக்களின் கோபக் கனலுக்கு ஆளாகியிருக்கிறது.

அதிமுக ஆட்சியின் போது மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது தொடர் மின்வெட்டால் இருளில் தத்தளிக்கிறது. இந்த நிலையில், திமுக நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை, மின் சந்தைகளில் இருந்து தமிழ்நாடு அரசு வாங்கி சமாளிப்பதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், திமுக அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், மின் சந்தைகளில் இருந்து மின்சாரத்தை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சென்னை போன்ற பெருநகரங்களில், குத்துமதிப்பாக கணக்குப் போட்டு, மின்வாரியத்தால் மின் கட்டண ரசீது அனுப்பப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், அதை வைத்து அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதாக வைப்புத்தொகை கட்டணத்தை உயர்த்தி நோட்டீஸ் அனுப்பியதையும் நினைவு கூர்ந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின்படி, மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறை அமல்படுத்தாவிட்டால், மின்வெட்டு மற்றும் அதிக மின் கட்டணம் ஆகிய இன்னலுக்கு தமிழக மக்கள் தள்ளப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version